வங்க கடலில் இன்று உருவாகிறது ‘யாஸ்' புயல் ஒடிசா-வங்காளதேசம் இடையே கரையை கடக்கும்

வங்க கடலில் இன்று (திங்கட்கிழமை) ‘யாஸ்' புயல் உருவாகிறது என்றும், இது ஒடிசா-வங்காளதேசம் இடையே நாளை மறுதினம் (புதன்கிழமை) கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அரபிக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான டவ்தே புயல் குஜராத் அருகே கரையைக் கடந்தது. அப்போது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பொழிந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகி இருக்கிறது.

கடந்த 21-ந் தேதி கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அதற்கு மறுநாள் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நிலைகொண்டிருந்தது. அது இன்று (திங்கட்கிழமை) புயலாக வலுவடைகிறது. இந்த புயலுக்கு ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை ஓமன் நாடு சூட்டியுள்ளது. இந்த வார்த்தை பாரசீக மொழியில் இருந்து தோன்றியதாகவும், ஆங்கிலத்தில் இதன் பொருள் ‘ஜாஸ்மின்’ என்றும் கூறப்படுகிறது.

இந்த புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுப்பெற்று, வடக்கு ஒடிசா மற்றும் வங்காளதேசம் இடையே நாளை மறுதினம் (புதன்கிழமை) கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாளை மறுதினம் வரை தமிழக, ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்று ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலால் தமிழகத்தில் பெரிய அளவுக்கு மழை இருக்காது என்றாலும், அதன் மூலம் தரைக்காற்று வீசுவதால் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினமும் (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment