அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கானஈட்டிய விடுப்பு ஊதியம் மீண்டும் ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைப்புதமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எவ்வித பிடித்தமுமின்றி வழங்கப்படும்.

இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சம்பள கணக்கு அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பித்து பெறுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, கடந்த மார்ச் மாதம் வரை ஒரு ஆண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவெடுத்து, இதற்கான உத்தரவை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை வெகுவேகமாக பரவி வருகிறது. 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், அடுத்த ஆண்டு 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை மேலும் ஒரு ஆண்டுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, அரசின் அனைத்து அமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் பொருந்தும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment