‘மக்கள் மருத்துவர்' என்று பெயர் எடுத்த பெண் டாக்டரின் உயிரை பறித்த கொரோனா கிராம மக்கள் உருக்கம்


மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா (வயது 32). 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம் போல நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். மருத்துவ சேவையில் ஈடுபட்ட சண்முகப்பிரியாவின் இறப்பு, மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சண்முகப்பிரியாவின் இறப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுபோல தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த செய்திக் குறிப்பில், டாக்டர் சண்முகபிரியாவின் மறைவு மருத்துவர்களிடைய பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது மருத்துவர்கள் தயவுகூர்ந்து கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்றும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்துபோன சண்முகப்பிரியாவின் பூர்விகம் மதுரையாக இருந்தாலும், அவர் பிறந்து, வளர்ந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமம் ஆகும். அவருடைய தாயார் பிரேமா, ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

மருத்துவமனையில் தனது தாய் மக்களுக்கு சிகிச்சை அளித்ததை பார்த்து, சிறுவயது முதலே தானும் டாக்டராக வேண்டும் என லட்சியத்துடன் சண்முகப்பிரியா கல்வி பயின்றார். அதன்படி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் படித்து டாக்டரானார்.

அதன்பிறகு அவர், சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக நியமிக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி, சின்னமனூர் பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றினார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை சண்முகப்பிரியா பெற்றார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு அவர், சின்னமனூரில் இருந்து மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டராக நியமிக்கப்பட்டார். அங்கும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி வந்தார்.

குறிப்பாக கொரோனா பரவல் காலக்கட்டங்களில் மக்களுக்கு பாகுபாடின்றி அவர் சிகிச்சை அளித்தார். இந்தநிலையில் தான், கொரோனா சண்முகப்பிரியாவின் உயிரை பறித்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் பிறந்த ஊரான ஓடைப்பட்டி கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தோழிகள் கூறுகையில், சிறுவயது முதலே டாக்டராக வேண்டும், பலருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே சண்முகப்பிரியாவின் லட்சியமாக இருந்தது. அதேபோல் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஏழை-எளிய மக்களின் சிறந்த மருத்துவர் என்று பெயர் பெற்றார். அவரது இறப்பை எங்களால் ஏற்க முடியவில்லை என்றனர்.

No comments:

Post a Comment