அரபிக்கடலில் உருவாகிறது தக்தே புயல்தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் இன்று (சனிக்கிழமை) தக்தே புயல் உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (சனிக்கிழமை) காலை புயலாக உருவாகிறது. இந்த புயலுக்கு தக்தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதை டவ் தே என உச்சரிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இது மியான்மர் நாடு வைத்த பெயர் ஆகும். தக்தே என்பது மியான்மரில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 18- ந் தேதி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

அதேபோல் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினமும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment