பிளஸ்-2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம் என்பதால் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். காணொலி காட்சி மூலம் ஆலோசனை பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறும். ஆனால் நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மீண்டும் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, எப்போது தேர்வு நடைபெறும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 

இந்த நிலையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் அரசு, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது உள்பட பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது பற்றி தனிக்குழு அமைத்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சென்னை தலைமையகத்தில் இருந்தபடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். தேர்வு கட்டாயம் அப்போது அந்தந்த மாவட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள், பள்ளிகள், மாணவ-மாணவிகளின் நிலை குறித்தும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாகவும், ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு பற்றியும் விரிவாக பேசி இருக்கிறார். 

கூட்டத்தில் கருத்துகளை கேட்டதோடு மட்டுமல்லாமல், சில தகவல்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்வைத்து இருக்கிறார். அதன்படி, ஆலோசனை கூட்டத்தில் முக்கிய பொருளாக பேசப்பட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக சில கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். அதாவது, உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியமாக இருக்கிறது என்றும், எனவே பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்த பிறகு தேர்வு நடத்தப்பட வேண்டும். அதற்கேற்றாற்போல் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment