1,212 நர்சுகள் பணி நிரந்தரம்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, அதை சிறப்பாக மேலாண்மை செய்வதற்காக ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்டிருந்த 1,212 நர்சுகளை நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் எஸ்.குருநாதன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு இருந்த 1,212 நர்சுகள், நிரந்தர காலமுறை ஊதியத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 25-ந் தேதி உத்தரவிடப்பட்டது.

தற்போது கொரோனா பரவலில் 2-வது அலை வீசும் சூழ்நிலையில், அதை போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளை கவனிப்பது, மேலாண்மை செய்வது மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை சந்திப்பது அவசியமாக உள்ளது.

இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. கொரோனா 2-வது அலை வீசும் சூழ்நிலையில் சென்னையில் உள்ள கொரோனா மையங்களை மேலாண்மை செய்வதற்காக கூடுதல் மனிதவளம் சேர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒப்பந்தப்பணியில் நியமிக்கப்பட்டுள்ள 1,212 ‘ஸ்டாப்’ நர்சுகள் நிரந்தர பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ள இடத்திற்கான உத்தரவை பெறுவதற்காக மருத்துவ கல்வி இயக்குனரை வந்து சந்திக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான பணி குறித்த உத்தரவை அவர் வழங்குவார்.

ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் இடத்தில் இருந்து 5-ந் தேதி (இன்று) உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நிரந்தர பணியில் நியமிக்கப்படும் அவர்களுக்கான பணியிடம் பின்னர் அறிவிக்கப்படும்.

நிரந்தர பணி பெற்ற அவர்களில் யாருக்காவது பணியிட உத்தரவு வரவில்லை என்றால், அவர்கள் 10-ந் தேதிக்குள் மருத்துவ கல்வி இயக்குனரை சந்திக்க வேண்டும்.

அவரது அலுவலகத்திற்கு வராதவர்கள், தங்களின் நிரந்தர பணியை இழக்க நேரிடும். அதோடு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment