கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் குரூப்-1 முதன்மைத்தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? தேர்வாணையம் பதில் அளிக்க தேர்வர்கள் கோரிக்கை

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி குரூப்-1 முதன்மைத்தேர்வு நடைபெறுமா? என்று தேர்வாணையம் பதில் அளிக்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டு அதிகரித்து இருந்தபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட இருந்த அரசு பணிக்கான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

அதன்பின்னர், நோய் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து சில தேர்வுகளை மட்டும் தேர்வாணையம் நடத்தியது. அந்தவகையில் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் அடங்கிய 66 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதற்கான தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி வெளியானது.

குரூப்-1 பதவியை பொறுத்தவரையில், முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வை ஒவ்வொரு தேர்வர்களும் எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வு முடிந்துள்ள நிலையில், அதற்கடுத்ததாக நடைபெறும் முதன்மைத் தேர்வு வருகிற 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற இருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

கொரோனா தொற்று தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தேர்வாணையம் ஏற்கனவே திட்டமிட்டபடி குரூப்-1 முதன்மைத் தேர்வை நடத்துமா? அல்லது தேர்வை ஒத்திவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்பது போன்ற தகவல்கள் எதுவும் கிடைக்காமல், தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

எனவே இதற்கு தேர்வாணையம் பதில் அளிக்க வேண்டும் என்றும், தேர்வு நடத்தப்படும் என்றால், சென்னை மட்டுமே தேர்வு மையமாக இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment