🙋 என்ஜினீயரிங் படிப்புக்கான JEE நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைப்பு மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து இந்த மாதம் நடைபெற இருந்த என்ஜினீயரிங் (ஜே.இ.இ.) பிரதான நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

என்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களது மதிப்பெண்களை அதிகரிக்கும் வகையிலும் இந்த ஆண்டு முதல் ஜே.இ.இ பிரதான நுழைவுத்தேர்வு 4 முறை நடத்தப்படுகிறது. அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்களின் சிறந்த மதிப்பெண்ணை கருத்தில் எடுக்கப்படும்.

அந்தவகையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முறையே 6.2 லட்சம் மற்றும் 5.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத நுழைவுத்தேர்வுகள் வருகிற 27 முதல் 30-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்களும் சிறப்பாக தயாராகி வந்தனர்.

ஆனால் நாடு முழுவதும் தற்போது கொரோனா அலை சுழன்றடிக்கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 2.61 லட்சத்துக்கு மேற்பட்ட புதிய பாதிப்புகளும், 1500-க்கு மேற்பட்ட மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்திருக்கின்றன.

இந்த சூழலில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது.

அதன்படி மேற்படி தேர்வுகளை தள்ளிவைப்பதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு ஏஜென்சி (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக என்.டி.ஏ. வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், மாணவர்கள் மற்றும் தேர்வு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் ஏப்ரல் மாத ஜே.இ.இ. பிரதான தேர்வுகளை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அதாவது தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளது.

முன்னதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் தளத்தில், ‘தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாத ஜே.இ.இ. பிரதான தேர்வுகளை தள்ளிவைக்குமாறு என்.டி.ஏ. இயக்குனருக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். நமது மாணவர்கள் மற்றும் அவர்களது கல்வியின் பாதுகாப்புமே எனது தற்போதைய கவலையாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டும் வருகின்றன. அந்தவகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment