சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 31 பேர் தேர்ச்சி

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் முதன்மை தேர்வுக்கு பயிற்சிபெற பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய இலவச பயிற்சி மையம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு ‘மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுக்கு திறமைவாய்ந்த நிபுணர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய இலவச பயிற்சி மையம் பயிற்சி அளித்தது.

இந்த நிலையில் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதில் மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

இதுதொடர்பாக மனிதநேய இலவச பயிற்சி மையத்தின் இயக்குனர் கார்த்திக்கேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

31 பேர் தேர்ச்சி

மனிதநேய இலவச பயிற்சி மையம் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர்பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பயிற்சி அளித்து வருகிறது.

கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, 2, 2ஏ உள்பட பல்வேறு பதவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, இதுவரை 3 ஆயிரத்து 534 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.

அந்தவகையில் தற்போது நடந்து முடிந்த முதல்நிலைத் தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையத்தில் இலவசமாக படித்து தேர்வு எழுதியவர்களில் 9 மாணவிகளும், 22 மாணவர்களும் என மொத்தம் 31 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

முதன்மை தேர்வுக்கு பயிற்சி

கொரோனா நோய்த் தொற்றினால் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மே மாதம் வரை நடைபெற வேண்டிய வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை முழுமையாக நடத்த முடியாததால், மாணவர்கள் பெரும்பாலானோரால் தேர்வு எழுத முடியாமல் போனது. அதனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக www.mnt-freeias.comஎன்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment