3-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு

என்ஜினீயரிங் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வும் நிறைவுபெற்று இருக்கிறது. இதுவரை 42 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் 461 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அதன்படி, என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 500 இடங்களும், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு 150 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்களுக்கு 6 ஆயிரத்து 785 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. அதில் வெறும் 497 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதம் 6 ஆயிரத்து 288 இடங்கள் பூர்த்தியாகவில்லை. அவை அப்படியே பொது கலந்தாய்வில் சேர்க்கப்பட்டன.

41,924 இடங்கள் நிரம்பின

பொது கலந்தாய்வு கடந்த 8-ந்தேதி முதல் தொடங்கி ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் 3 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. முதல் கட்ட கலந்தாய்வில் 12 ஆயிரத்து 263 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டதில், 7 ஆயிரத்து 510 இடங்கள் மட்டுமே நிரம்பின. 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு 22 ஆயிரத்து 904 பேர் அழைக்கப்பட்டதில் 13 ஆயிரத்து 415 மாணவ-மாணவிகள் இடங்களை தேர்வு செய்தனர்.

3-ம் கட்ட கலந்தாய்வு கடந்த 16-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதற்கு 35 ஆயிரத்து 133 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 20 ஆயிரத்து 999 பேர் என்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்து இருக்கின்றனர். 3 கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வு நிறைவு பெற்றதில், இதுவரை 41 ஆயிரத்து 924 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

கடந்த ஆண்டைவிட சேர்க்கை குறைவு

4-ம் கட்ட கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி தொடங்கி இருக்கிறது. இதற்கு 40 ஆயிரத்து 573 பேர் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கான விருப்ப இடங்கள், கல்லூரிகளை தேர்வு செய்ய இன்று(ஞாயிற்றுக்கிழமை) அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. நாளையும்(திங்கட்கிழமை), நாளை மறுதினமும்(செவ்வாய்க்கிழமை) தற்காலிக ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு அட்டவணை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 28-ந்தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெற உள்ளது.

2019-20-ம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் சுமார் 86 ஆயிரம் இடங்கள் நிரம்பி இருந்தன. அதனோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கலந்தாய்வு நிறைவில் கடந்த ஆண்டைவிட மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அதற்கு முந்தைய ஆண்டில்(2018-19) 70 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. அந்த ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment