நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திர அரசு அதிரடி 1¼ லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் நியமனம் ஜெகன் மோகன் ரெட்டி ஆணைகளை வழங்கினார்

நாட்டிலேயே முதல் முறையாக, ஆந்திர மாநில அரசு ஒரே நாளில் 1¼ லட்சம் ஊழியர்களை நியமித்துள்ளது. பணி நியமன ஆணைகளை ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.

ஆந்திர மாநில அரசு, புதிய நிர்வாக நடைமுறையாக, கிராமங்களில் கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்குகிறது. இந்த செயலகங்களில் 500 வகையான பொது சேவைகள் வழங்கப்படும். கிராமப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலம் ஆகியவை தொடர்பான சேவைகளும், நகர்ப்புறங்களில் நகராட்சி தொடர்பான சேவைகளும் வழங்கப்படும்.

இங்கு பணியாற்றுவதற்கான நிரந்தர ஊழியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த 1-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை ஆந்திர மாநில அரசு எழுத்து தேர்வு நடத்தியது.

தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 19 லட்சத்து 50 ஆயிரம்பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 164 பேர் தகுதி பெற்றனர். அவர்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் நகர்ப்புறங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 31 ஆயிரத்து 640 பேர் ஆவர்.

இந்நிலையில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கும் பணிநியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன. விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று பெருமிதமாக கூறினார். அவர் பேசியதாவது:-

ஒரே நேரத்தில் இவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதுடன், வெறும் இரண்டே மாதங்களில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த சாதனை, வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.

ஊழல் இல்லாமல் அரசு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை ஒரு வேலையாக மட்டும் கருதாமல் சேவையாக கருத வேண்டும். இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து அவ்வப்போது தணிக்கை செய்யப்படும் அதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப இனிமேல் ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.

ஆந்திரா முழுவதும் 11 ஆயிரத்து 158 கிராம செயலகங்களும், 3 ஆயிரத்து 786 வார்டு செயலகங்களும் திறக்கப்படுகின்றன. டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் இருந்து இவை செயல்பட தொடங்கும்.

ஒவ்வொரு செயலகத்திலும் 10 முதல் 12 ஊழியர்கள் இருப்பார்கள். மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனைக்காக ஒரு பெண் போலீசும், பெண்கள் நல உதவியாளரும் இருப்பார்கள். இங்குள்ள பணியாளர்களுக்கு உதவுவதற்காக கிராம, வார்டு தன்னார்வ தொண்டர்களும் இருப்பார்கள். அந்த தொண்டர்கள் பணிக்கு 2 லட்சத்து 80 ஆயிரம்பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment