தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அதிகமாக உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு 30ல் பணி நிரவல்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அதிகமாக உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் 30ம் தேதி பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது: தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1.8.2018ம் ஆண்டு நிலவரப்படி ஆசிரியர் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்டுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2019-2020ம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 20.6.2019 அன்று இடைக்காலத்தடை விதிக்கப்பட்டதால் இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் நடைபெறாமல் உள்ளது. ஆனால் பணிநிரவல் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ள அரசாணையை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் 11.8.2010ம் ஆண்டு நிலவரப்படி ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் முடிவடைந்த நிலையில், நடைபெறாமல் இருந்த உபரி இடைநிலை ஆசிரியர் பணிநிரவலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு 1.8.2018 அன்று நிலவரப்படி ஆசிரியர், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் நிர்ணயம் மேற்கொள்ளப்படுகிறது. உபரி பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களில் இன்றைய தேதியில் உள்ள நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்கள், பணியிடம் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளில் பணி நிரவல் செய்ய வேண்டும். பணி நிரவலை கல்வித் தகவல் மேலாண்மை முறை (இஎம்ஐஎஸ்) வாயிலாக வரும் 30ம் தேதி அன்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment