டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். விவாதம் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பொதுத் துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு (திருச்சி மேற்கு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:- வேலைக்கு செல்ல முடியாத நிலை கே.என்.நேரு:- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவை விமர்சனத்திற்கு ஆளாகின. முன்பு முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.500 ஆக இருந்தது. அதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியவர் கருணாநிதி. கடந்த ஆண்டு அது ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானவர்கள் இன்றும் சிரமமான நிலையில் உள்ளனர். ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் பிறகு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு அதை கவனத்தில் கொள்ளவேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த சிரமப்படுவதாக உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். அதனால் தான், ரூ.12 ஆயிரமாக இருந்த ஓய்வூதியம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ செலவு கட்டணமும் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை கே.என்.நேரு:- எம்.எல்.ஏ.க்கள் என்றால் தினமும் 4 பெரிய காரியங்களுக்கு செல்ல வேண்டும். தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். மாலையில் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க செல்ல வேண்டும். இப்படி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதால் செலவு அதிகரிக்கிறது. எனவே, அந்தத் தொகையை மட்டும் தந்தால்போதும். எங்களுக்கு சம்பளமே வேண்டாம். அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இன்றைக்கு கேள்விக்குறியான நிலையில் உள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 62 பேர் சென்னையில் உள்ள 2 பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள். முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார்:- கடந்த 2014-2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமே போலீசில் புகார் அளித்தது. இந்த தேர்வை ரத்து செய்யச்சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 'சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.என்.நேரு:- திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால், 7 தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ஏற்கனவே தி.மு.க. ஆட்சி காலத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், 120 ஏக்கர் அரசு நிலமாகும். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தொடர்பாக மாநகராட்சியின் பரிந்துரையில் உறுப்பினரின் கோரிக்கையும் சேர்க்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். காலிப் பணியிடம் அமைச்சர் ஜெயக்குமார்:- உறுப்பினர் இங்கே எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை பற்றி பேசினார். முதலில் உயர்த்திய சம்பளத்தை அவரது கட்சித் தலைவர் வாங்கிக்கொள்ளட்டும். கே.என்.நேரு:- இந்த விஷயத்தில் என்னை ஏன் கோர்த்து விடுகிறீர்கள்?. எங்கள் தலைவர் சொன்னால், நாங்களும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்கமாட்டோம். தமிழக அரசுப் பணிகளில் 5½ லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. தற்போது, பணியிடங்களை வரைமுறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய ஜாக்டோ - ஜியோ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்:- 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 135 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment