பிளஸ்-2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம் என்பதால் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். காணொலி காட்சி மூலம் ஆலோசனை பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறும். ஆனால் நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மீண்டும் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, எப்போது தேர்வு நடைபெறும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 

இந்த நிலையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் அரசு, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது உள்பட பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது பற்றி தனிக்குழு அமைத்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சென்னை தலைமையகத்தில் இருந்தபடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். தேர்வு கட்டாயம் அப்போது அந்தந்த மாவட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள், பள்ளிகள், மாணவ-மாணவிகளின் நிலை குறித்தும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாகவும், ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு பற்றியும் விரிவாக பேசி இருக்கிறார். 

கூட்டத்தில் கருத்துகளை கேட்டதோடு மட்டுமல்லாமல், சில தகவல்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்வைத்து இருக்கிறார். அதன்படி, ஆலோசனை கூட்டத்தில் முக்கிய பொருளாக பேசப்பட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக சில கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். அதாவது, உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியமாக இருக்கிறது என்றும், எனவே பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்த பிறகு தேர்வு நடத்தப்பட வேண்டும். அதற்கேற்றாற்போல் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘மக்கள் மருத்துவர்' என்று பெயர் எடுத்த பெண் டாக்டரின் உயிரை பறித்த கொரோனா கிராம மக்கள் உருக்கம்


மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா (வயது 32). 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம் போல நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். மருத்துவ சேவையில் ஈடுபட்ட சண்முகப்பிரியாவின் இறப்பு, மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சண்முகப்பிரியாவின் இறப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுபோல தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த செய்திக் குறிப்பில், டாக்டர் சண்முகபிரியாவின் மறைவு மருத்துவர்களிடைய பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது மருத்துவர்கள் தயவுகூர்ந்து கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்றும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்துபோன சண்முகப்பிரியாவின் பூர்விகம் மதுரையாக இருந்தாலும், அவர் பிறந்து, வளர்ந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமம் ஆகும். அவருடைய தாயார் பிரேமா, ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

மருத்துவமனையில் தனது தாய் மக்களுக்கு சிகிச்சை அளித்ததை பார்த்து, சிறுவயது முதலே தானும் டாக்டராக வேண்டும் என லட்சியத்துடன் சண்முகப்பிரியா கல்வி பயின்றார். அதன்படி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் படித்து டாக்டரானார்.

அதன்பிறகு அவர், சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக நியமிக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி, சின்னமனூர் பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றினார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை சண்முகப்பிரியா பெற்றார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு அவர், சின்னமனூரில் இருந்து மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டராக நியமிக்கப்பட்டார். அங்கும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி வந்தார்.

குறிப்பாக கொரோனா பரவல் காலக்கட்டங்களில் மக்களுக்கு பாகுபாடின்றி அவர் சிகிச்சை அளித்தார். இந்தநிலையில் தான், கொரோனா சண்முகப்பிரியாவின் உயிரை பறித்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் பிறந்த ஊரான ஓடைப்பட்டி கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தோழிகள் கூறுகையில், சிறுவயது முதலே டாக்டராக வேண்டும், பலருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே சண்முகப்பிரியாவின் லட்சியமாக இருந்தது. அதேபோல் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஏழை-எளிய மக்களின் சிறந்த மருத்துவர் என்று பெயர் பெற்றார். அவரது இறப்பை எங்களால் ஏற்க முடியவில்லை என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1,212 நர்சுகள் பணி நிரந்தரம்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, அதை சிறப்பாக மேலாண்மை செய்வதற்காக ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்டிருந்த 1,212 நர்சுகளை நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் எஸ்.குருநாதன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு இருந்த 1,212 நர்சுகள், நிரந்தர காலமுறை ஊதியத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 25-ந் தேதி உத்தரவிடப்பட்டது.

தற்போது கொரோனா பரவலில் 2-வது அலை வீசும் சூழ்நிலையில், அதை போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளை கவனிப்பது, மேலாண்மை செய்வது மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை சந்திப்பது அவசியமாக உள்ளது.

இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. கொரோனா 2-வது அலை வீசும் சூழ்நிலையில் சென்னையில் உள்ள கொரோனா மையங்களை மேலாண்மை செய்வதற்காக கூடுதல் மனிதவளம் சேர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒப்பந்தப்பணியில் நியமிக்கப்பட்டுள்ள 1,212 ‘ஸ்டாப்’ நர்சுகள் நிரந்தர பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ள இடத்திற்கான உத்தரவை பெறுவதற்காக மருத்துவ கல்வி இயக்குனரை வந்து சந்திக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான பணி குறித்த உத்தரவை அவர் வழங்குவார்.

ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் இடத்தில் இருந்து 5-ந் தேதி (இன்று) உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நிரந்தர பணியில் நியமிக்கப்படும் அவர்களுக்கான பணியிடம் பின்னர் அறிவிக்கப்படும்.

நிரந்தர பணி பெற்ற அவர்களில் யாருக்காவது பணியிட உத்தரவு வரவில்லை என்றால், அவர்கள் 10-ந் தேதிக்குள் மருத்துவ கல்வி இயக்குனரை சந்திக்க வேண்டும்.

அவரது அலுவலகத்திற்கு வராதவர்கள், தங்களின் நிரந்தர பணியை இழக்க நேரிடும். அதோடு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் குரூப்-1 முதன்மைத்தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? தேர்வாணையம் பதில் அளிக்க தேர்வர்கள் கோரிக்கை

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி குரூப்-1 முதன்மைத்தேர்வு நடைபெறுமா? என்று தேர்வாணையம் பதில் அளிக்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டு அதிகரித்து இருந்தபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட இருந்த அரசு பணிக்கான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

அதன்பின்னர், நோய் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து சில தேர்வுகளை மட்டும் தேர்வாணையம் நடத்தியது. அந்தவகையில் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் அடங்கிய 66 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதற்கான தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி வெளியானது.

குரூப்-1 பதவியை பொறுத்தவரையில், முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வை ஒவ்வொரு தேர்வர்களும் எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வு முடிந்துள்ள நிலையில், அதற்கடுத்ததாக நடைபெறும் முதன்மைத் தேர்வு வருகிற 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற இருப்பதாக அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

கொரோனா தொற்று தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தேர்வாணையம் ஏற்கனவே திட்டமிட்டபடி குரூப்-1 முதன்மைத் தேர்வை நடத்துமா? அல்லது தேர்வை ஒத்திவைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்பது போன்ற தகவல்கள் எதுவும் கிடைக்காமல், தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

எனவே இதற்கு தேர்வாணையம் பதில் அளிக்க வேண்டும் என்றும், தேர்வு நடத்தப்படும் என்றால், சென்னை மட்டுமே தேர்வு மையமாக இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மறு அறிவிப்பு வெளியிடும் வரை பள்ளி ஆசிரியர்கள் 1-ந்தேதி முதல் பள்ளிக்கு வர தேவையில்லை பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

மறு அறிவிப்பு வெளியிடும் வரையில் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில பணிகளுக்காக ஒரு சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், அந்த ஆசிரியர்களும் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்க வேண்டும்.

மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் மெட்டீரியல் மற்றும் ஒர்க் புக்கில் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும், வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கவும், இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள செல்போன், வாட்ஸ்-அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மற்றும் மாற்று வழிகள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாணவர்கள் மேற்காணும் வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாள்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்க மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டும், அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும், மாணவர்களுக்கான மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், 2021 மே மாதம் கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இதற்கான மறு அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

👍 டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர் விடைத்தாள் நகல் பெறலாம் இணையதளம் மூலம் பெற புதிய வசதி.

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு எண்: 15/2021 நாள்: 19.04.2021 தேர்வாணையம் தனது தேர்வு முறைகளில் முற்போக்கான பல மாற்றங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 07.02.2020 மற்றும் 15.02.2020 நாளிட்ட செய்தி வெளியீட்டு எண்களான 08/2020 மற்றும் 13/2020 இல் தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையில் பின்வரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன: 
1. ஆதார் எண் குறித்த விவரங்களை OTR கணக்குடன் இணைத்தல். 
2. தேர்வர்களின் மெய்த்தன்மை உறுதி செய்ய தேர்வு நேரங்களில் மாற்றம் செய்தல். 
3. தேர்வர்களுக்கு வழங்கப்படும் OMR கொள்குறிவகை விடைத்தாளில் பெருவிரல் ரேகை பதித்தல். 
4. அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர் கட்டாயம் விடையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் 
5. தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்காக தெரிவு செய்யும் இரண்டு மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு மையமாக ஒதுக்குதல். 
6. தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாட்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்து வருவதற்கு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பாதுகாப்பினை செயல்படுத்துதல். 
7. தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி உடனடியாக பெற்றுக் கொள்ளுதல். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேற்கூறிய மாற்றங்களில் வரிசை எண் 1 முதல் 6 வரை கூறப்பட்டவை செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. 

மேலும், வரிசை எண் 7 இல் கூறப்பட்டுள்ள மாற்றம் தற்போது நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக, 03.03.2019 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 அதாவது தொகுதி 1 ல் அடங்கிய பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு மற்றும் அதே பதவிகளுக்கான 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய தினங்களில் நடைபெற்ற முதன்மைத் தேர்வுக்கான விடைத்தாட்கள் 21.04.2021 அன்று தேர்வாணயத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. 

இணையதளத்தில் தேர்வர்களின் விடைத்தாட்களை பதிவேற்றம் செய்வது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். எனவே இவ்வாய்ப்பினை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இத்தேர்வினை எழுதிய விண்ண ப்பதாரர்கள் அவரவர் OTR கணக்கு மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி அவரவர் விடைத்தாட்களை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேற்படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 அதாவது தொகுதி 1 ல் அடங்கிய பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய தெரிவுப் பட்டியல் அவர்களுடைய புகைப்படங்களுடன் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது விண்ணப்பதாரர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும், 01.01.2020 க்கு பிறகு தெரிவு நடவடிக்கைகள் முற்றிலும் நிறைவடைந்துள்ள தேர்வுகளின் விடைத்தாட்கள் இணையதளத்தில் படிப்படியாக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இரா . சுதன், இ.ஆ.ப., தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர். .
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

👉 AU EXAM 2021 | புத்தகத்தை பார்த்து எழுதலாம்ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள்அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செமஸ்டர் தேர்வை நடத்தியது. இந்த தேர்வை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.

கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது.

அதற்காக அண்ணா பல்கலைக்கழகம் பிரத்தியேகமாக மென்பொருளை உருவாக்கி இருந்தது. அந்த மென்பொருளை பயன்படுத்திதான் 3 செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்தது.

அந்தவகையில் சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 30 முதல் 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியானது. இது தேர்வை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

பிரத்யேக மென்பொருள் மூலம், பல்வேறு ஆப்ஷன்களுடன் கூடிய கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு தேர்வை நடத்திய போது மாணவர்கள், வாட்ஸ் அப் மூலம் பதிலைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டதால் அது முறைகேடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும், இதன் காரணமாக அம்மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதத்தில் (மே) நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட இருப்பதாகவும், அதன்படி நேரடி விடைகளைக் கொண்ட கேள்வியாக இல்லாமல், பாடங்களைப் புரிந்து பதில் அளிக்கும் வகையில் விளக்க வகை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்றும், இதற்காக மாணவர்கள் தேர்வின் போதே புத்தகத்திலும், இணையத்திலும் எடுத்துக்காட்டுகளை தேடி, அதன்படி விடையளிக்க வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய விளக்க வகை தேர்வானது, இறுதி செமஸ்டர் மாணவர்கள் தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் என்றும், அதே வேளையில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வழக்கம் போல், பல்வேறு ஆப்ஷன்களைக் கொண்ட நேரடி கேள்விகளே கேட்கப்படும் என்றும், அவர்களுக்கு இந்த புதிய மாற்றம் பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

😖 ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா பரவலில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தன் கோர முகத்தைக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக 2 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா தனது பிடியில் சிக்க வைத்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது இதுவரை காணப்படாத புதிய உச்சம் என்பது பதிவு செய்யத்தக்கதாகும்.

நாட்டில் இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படுகிற உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பது கவலைதரக்கூடிய அம்சமாக மாறி வருகிறது.

நேற்று முன்தினம் 1,341 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,501 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு இரையானோர் மொத்த எண்ணிக்கையானது 1 லட்சத்து 77 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பலியான 1,501 பேரில் 419 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். டெல்லியில் 167 பேரும், சத்தீஷ்காரில் 158 பேரும், உத்தரபிரதேசத்தில் 120 பேரும் கொரோனாவின் பிடியில் இருந்து மீள முடியாமல் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

இருப்பினும் நேற்று அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 9 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பின.

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.20 சதவீதம் ஆகும்.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1 லட்சத்து 38 ஆயிரத்து 423 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இதுவரை இப்படி நாட்டில் மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 643 பேர் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகபட்ச எண்ணிக்கையாக மராட்டிய மாநிலத்தில் 56 ஆயிரத்து 783 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் 15 ஆயிரத்து 414 பேரும், சத்தீஷ்காரில் 9,828 பேரும் கொரோனா தொற்று பிடியில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 86.62 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் நேற்று தொடர்ந்து 39-வது நாளாக சிகிச்சையில் சேருவோர் எண்ணிக்கை ஏறுமுகம் கண்டுள்ளது. அந்த வகையில் நேற்று மட்டுமே புதிதாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 576 பேர் புதிதாக கொரோனா மீட்புக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து ஆயிரத்து 316 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 12.18 சதவீதம் ஆகும்.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிற மராட்டியத்தில் மட்டுமே 6 லட்சத்து 49 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெறுகின்றனர். உத்தரபிரதேசத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 59 பேரும், சத்தீஷ்காரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 400 பேரும், கர்நாடகத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 179 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 லட்சத்து 66 ஆயிரத்து 394 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

😱 தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு..ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு...தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ந் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், ஷோரூம்கள் போன்றவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

வழிபாட்டு தலங்களை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரைக்கும், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 50 பேர் வரைக்கும் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா உள்ளிட்ட கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா பரவல் 1.6 சதவீதமாக இருந்தது.

ஒரே மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்து கொரோனா பரவல் 9.6 சதவீதம் ஆனது. சென்னையை பொறுத்தமட்டில் கொரோனா பரவல் 16 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

இதன்காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த 20-ந் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

*கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

*வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் அனுமதிக்கப்படமாட்டாது.

*இரவு நேர ஊரடங்கின் போது அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள்போன்ற மருத்துவத்துறை சேர்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போதுஅனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

*பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

*தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

*மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

*அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

*அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

*முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

*சோமட்டோ, சுவிக்கி போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகிறது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

*ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

*முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையும் இல்லை.

*ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

*பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

*தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

*கும்பாபிஷேகம், திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது கும்பாபிஷேகம் நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ கோவில் பணியாளர்கள், கோவில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

புதிதாக கும்பாபிஷேகம், திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

*பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத்தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

*கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

*தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, அனுமதி வழங்கலாம். இதுபோன்ற விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.

*திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முககவசம் அணிவது, சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை தவறாமல் பின்பற்றப்படுவதை திருமண மண்டப நிர்வாகம், தியேட்டர் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திருமண மண்டப மற்றும் தியேட்டர் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

*புதிய கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விடவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

*மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை போதுமான அளவு வைத்துக்கொள்ளவும், ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச் சரால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. 

ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய்பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் முககவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுவதையும், வெளியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

🙋 என்ஜினீயரிங் படிப்புக்கான JEE நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைப்பு மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து இந்த மாதம் நடைபெற இருந்த என்ஜினீயரிங் (ஜே.இ.இ.) பிரதான நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

என்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களது மதிப்பெண்களை அதிகரிக்கும் வகையிலும் இந்த ஆண்டு முதல் ஜே.இ.இ பிரதான நுழைவுத்தேர்வு 4 முறை நடத்தப்படுகிறது. அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்களின் சிறந்த மதிப்பெண்ணை கருத்தில் எடுக்கப்படும்.

அந்தவகையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முறையே 6.2 லட்சம் மற்றும் 5.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத நுழைவுத்தேர்வுகள் வருகிற 27 முதல் 30-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்களும் சிறப்பாக தயாராகி வந்தனர்.

ஆனால் நாடு முழுவதும் தற்போது கொரோனா அலை சுழன்றடிக்கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 2.61 லட்சத்துக்கு மேற்பட்ட புதிய பாதிப்புகளும், 1500-க்கு மேற்பட்ட மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்திருக்கின்றன.

இந்த சூழலில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது.

அதன்படி மேற்படி தேர்வுகளை தள்ளிவைப்பதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு ஏஜென்சி (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக என்.டி.ஏ. வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், மாணவர்கள் மற்றும் தேர்வு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் ஏப்ரல் மாத ஜே.இ.இ. பிரதான தேர்வுகளை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அதாவது தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளது.

முன்னதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் தளத்தில், ‘தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாத ஜே.இ.இ. பிரதான தேர்வுகளை தள்ளிவைக்குமாறு என்.டி.ஏ. இயக்குனருக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். நமது மாணவர்கள் மற்றும் அவர்களது கல்வியின் பாதுகாப்புமே எனது தற்போதைய கவலையாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டும் வருகின்றன. அந்தவகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

❇️ போலீஸ், தீயணைப்பு வீரர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு...

கொரோனா பரவல் அதிகரிப்பால் போலீஸ், தீயணைப்பு பணிக்கான உடல் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ்துறையில் 2-ம் நிலை போலீஸ் பணியில் மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 (ஆண்கள்), 3,099 (பெண்கள்/திருநங்கைகள்), தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் 6545 (ஆண்கள் மட்டும்), சிறைத்துறையில் 117 (ஆண்கள்), 7 (பெண்கள்), தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 458 (ஆண்கள் மட்டும்) என மொத்தம் 10 ஆயிரத்து 906 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு முடிவு வெளியானது.

இந்தநிலையில் எழுத்து தேர்வில் பெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்கூறு அளத்தல், உடல் தகுதித்தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி தேர்வுகள் வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான ‘ஹால்டிக்கெட்‘ தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதித் தேர்வில் பங்கேற்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு ‘தொற்று இல்லை’ என்ற சான்றிதழை அவசியம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா 2-வது அலை வேகம் எடுத்துள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேற்று அறிக்கை வாயிலாக வலியுறுத்தினர்.

அவர்கள் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் உடல் தகுதித்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அந்த செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக வருகிற 21-ந் தேதி முதல் நடத்தப்பட உள்ள சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி மற்றும் உடல்திறன் போட்டி தேர்வுகள் சில நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தேர்வு கடந்த மார்ச் 3-ந் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 12-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 21-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

😱 TN LOCK DOWN - தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல் - தலைமை செயலாளர் ஆலோசனை...

கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
சென்னை, ஏப்.17-

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி உள்ளது.

நேற்று முன்தினம் 7,987 என்றிருந்த தொற்றின் எண்ணிக்கை, நேற்று 8,449 ஆக உயர்ந்தது.

சென்னையில் நேற்று முன்தினம் 2,558 என்றிருந்த தொற்றின் எண்ணிக்கை நேற்று 2,636 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்றின் எண்ணிக்கை, தமிழக அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

எனவே இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு சார்பில், திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கடற்கரையில் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. எனவே கூடுதலாக கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது பற்றி ஆலோசிக்க அரசு முடிவு செய்தது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்புப்பணிகள் பற்றியும், தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், பகல் 12.30 மணிக்கு முடிந்தது.

தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இரவு ஊரடங்கை அமல்படுத்தலாமா? வார விடுமுறை நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தலாமா? என்பது போன்ற அம்சங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்கலாமா? என்றும், அதன் பிறகும் தொற்று எண்ணிக்கை குறையாமல் அதிகரிக்கும்பட்சத்தில் அரசு அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக குறைக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு வருகிறார். எனவே அவர் இதுகுறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

🤙 RASIPALAN - உங்கள் ராசி பலன் - 16.4.2021 முதல் 22.4.2021 வரை...

உங்கள் ராசி பலன் கணித்தவர்: `ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா
16.4.2021 முதல் 22.4.2021 வரை

மேஷம்
தளர்வடைந்த காரியங்களில், தக்க நபர் களின் உதவியோடு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு அதிகமாகும். தொழில் செய்பவர்கள், இரவு - பகல் பாராமல் பணிகளை முடிக்க பாடுபடுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் தலைகாட்டும். அவற்றை பெண்கள், சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.

ரிஷபம்

எதிர்பார்த்த வரவுகள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைப்பளுவால் அவதிப்படுவர். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப மீண்டும் அதே பணியைச் செய்ய வேண்டியதிருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். பெண்களால் உதிரி வருமானம் உண்டு. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம்.

மிதுனம்

எதிர்பாராத பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, முயற்சியின் பேரில் பணவரவு வரலாம். தொழில் செய்பவர்கள், கைகளில் உள்ள பணிகளை, உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். குடும்பத்தில் புதிய பொருட்கள் சேரும். பணிபுரியும் பெண் களால் குடும்ப நிதியில் பற்றாக்குறை அகலும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.

கடகம்

அதிக செலவுகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவால் சில சலுகைகளைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர் களுக்கு, வாடிக்கையாளர்களின் வரவால் வேலைப்பளு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பெண்கள் கவனமாக பணியாற்றுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்

சில காரியங்களை நண்பர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் பணியை துரிதமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

கன்னி

காரிய வெற்றிக்கு அதிக முயற்சி தேவைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் செல்வாக்கோடு கூடிய புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். தொழில் செய்பவர்கள், புதிய பணிகளில் ஓய்வில்லாமல் ஈடுபட வேண்டியதிருக்கும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை, குடும்ப உறுப்பினர்களே சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, லட்சுமி ஹயக்ரீவருக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.

துலாம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. உயரதிகாரி களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள். தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் மூலம், அவசர வேலைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்

வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பொறுப்புகளில் அதிகக் கவனம் செலுத்துங்கள். தொழில் செய்பவர்களுக்கு, புதிய பணிகள் கிடைத்து, எதிர்பார்த்த லாபம் வந்துசேரும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

தனுசு

நண்பர்களின் ஒத்துழைப்போடு உங்கள் காரியங்களில் வெற்றியடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலைகளில் கவனமாக செயல்படுங்கள். தொழிலில் ஓய்வில்லாமல் பணியாற்றுவதால், உடல்நலத்தில் சிறு தொல்லை ஏற்படலாம். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு அகலும். செலவுகள் கூடும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.

மகரம்

முயற்சி செய்யும் பல காரியங்களில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்துசேரலாம். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி பணிபுரிவீர்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபமிடுங்கள்.

கும்பம்

பல செயல்களில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, செல்வாக்குள்ள புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, பணிச் சுமைக்கு ஏற்ப, பணவரவுகளும் இருக்கும். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.

மீனம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள், விடுமுறையில் உள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய நேரிடும். தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களின் பணிகளை அதிக முயற்சியுடன் செய்து கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாகலாம். இந்த வாரம் புதன்கிழமை, லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

😎 SUB INSPECTOR RESULT - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு...

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவு நேற்று வெளியாகி இருக்கிறது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பொது பிரிவினர் ஒதுக்கீட்டில் 688 இடங்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பிரிவில் 281 இடங்கள் என மொத்தம் 969 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்தது.

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 969 பணியிடங்களில் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கும், இந்திய மாநில அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு பொது பிரிவினருக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதியும், துறை சார்ந்தவர்களுக்கு 13-ந்தேதியும் நடந்தது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக உடற்தகுதி தேர்வு கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 30-ந்தேதி நடத்தப்பட்டது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும், கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி முதல் கடந்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி வரையிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அந்தவகையில் இந்த 3 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 76 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு, கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் மற்றும் மாவட்ட நீதிபதி, குரூப்-1, 2, 2ஏ, சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயர் போன்ற பதவிகளுக்கும் அளிக்கப்பட்ட பயிற்சியை பெற்றவர்களில் இதுவரை 3 ஆயிரத்து 505 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று மத்திய-மாநில அரசு பணிகளில் உள்ளனர்.

அந்தவகையில், இந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான நேர்முகத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து மனிதநேய அறக்கட்டளையால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்தால் மிகச்சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு கவுரவ பயிற்சி இயக்குனர் மா.கார்த்திகேயன் மேற்பார்வையில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.

அவ்வாறு அளிக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டவர்களில், பொது ஒதுக்கீட்டில் 48 மாணவர்களும், ஒரு மாணவியும், போலீஸ் துறையில் பணிபுரிந்து வருபவர்களில் 23 மாணவர்களும், 4 மாணவிகளும் என ஆக மொத்தம் 76 பேர் இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 71 மாணவர்களும், 5 மாணவிகளும் அடங்குவார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

✍️ ARREAR EXAM - மே மாதம், ஆன்-லைன் மூலம் அரியர் தேர்வு ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்...

தமிழகத்தில் மே மாதம் ஆன்-லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அதில், என்ஜினீயரிங், கலை அறிவியல் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள், அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடைவதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்? என்பது குறித்து, முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ததில், தற்போது அனைத்து மாணவர்களுக்கும் வருகிற மே மாதம் இறுதிக்குள் ஆன்-லைன் மூலம் அரியர் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்துவதில் பல சிரமங்கள் உள்ளது. அரியர் தேர்வை குறைவான மாணவர்களே எழுதுவதால், நேரடி முறையில் தேர்வை நடத்த வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஆன்-லைன் அல்லது ஆப்-லைன் மூலமாக மாணவர்கள் அரியர் தேர்வு எழுத வேண்டும். தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைக்கழக மானிய குழுவிடம் ஆலோசனை பெற்று தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

✍️ PG NEET 2021 முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ஒத்திவைப்பு...

நாடு முழுவதும் 18-ந்தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்து உள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தையும் கடந்து மிகுந்த அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் கூடும் நிகழ்வுகளை ரத்து செய்து வருகிறது.

இதில் குறிப்பாக மாணவர்களின் நலன்களை கருதி பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்தவகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன.

இதைப்போல மாநிலங்களும் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வரிசையில் வருகிற 18-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வையும் தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதை ஏற்றும் கொரோனாவால் நாடு முழுவதும் எழுந்துள்ள அபாயத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்வை மத்திய அரசு தள்ளி வைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தனது டுவிட்டர் தளத்தில், ‘கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, 18-ந்தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி பின்னர் முடிவு செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.

இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

🤔 PLUS TWO EXAM 2021 - பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்தா? தலைமைச் செயலாளருடன் அதிகாரிகள் ஆலோசனை. தமிழக அரசின் முடிவு விரைவில் அறிவிப்பு.

பிளஸ்-2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பின்னர் தொற்று குறைந்ததால் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் மீண்டும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதும், பிளஸ்-2 வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டன. அவர்களுக்கு தேர்வும் நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டது.

உயர் கல்விக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 5-ந் தேதி முதல் அவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. ஆனால் தற்போது நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டு வருவதால் இந்த நேரத்தில் தேர்வை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை நேற்று முன்தினம் அறிவித்தது. அதேபோல், தமிழகத்திலும் பிளஸ்-2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற பேச்சு நேற்று முன்தினம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தை போல தேர்வை ஒத்திவைக்கலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது கொரோனா நோய்த் தொற்றின் 2-வது அலை தாக்கம் தமிழகத்தில் தீவிரமாக இருப்பதால், இந்த நேரத்தில் தேர்வை நடத்தாமல் ஒத்திவைக்கலாம் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

😨 corona affected 8000 - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 29 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கும், 256 குழந்தைகளும், 1,199 முதியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 93 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 797 ஆண்கள், 3 ஆயிரத்து 190 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 558 பேரும், செங்கல்பட்டில் 685 பேரும், கோவையில் 534 பேரும், திருவள்ளூரில் 473 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 29 பேரும், பெரம்பலூரில் 11 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 5 லட்சத்து 44 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 62 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 247 ஆண்களும், 3 லட்சத்து 81 ஆயிரத்து 652 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 34 ஆயிரத்து 908 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 34 ஆயிரத்து 93 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனையில் 14 பேரும் என 29 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 8 பேரும், காஞ்சீபுரத்தில் 4 பேரும், நாகப்பட்டினத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, நெல்லை, சேலத்தில் தலா இருவரும், கடலூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, தென்காசி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 13 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 999 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4,176 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,360 பேரும், கோவையில் 643 பேரும், செங்கல்பட்டில் 369 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 91 ஆயிரத்து 839 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 58 ஆயிரத்து 97 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

😰 corona - சுனாமி அலை போல கொரோனா தாக்குதல் - ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சுனாமி அலை போல கொரோனா தாக்கி உள்ளது. ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியப்பெருங்கடலில் 2004-ம்ஆண்டு, டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய சுனாமி அலைகளும் இதுவரை உலகம் கண்டிராததாக அமைந்தது. ஆழிப்பேரலைகள் மனிதர்களை, கொத்து கொத்தாக சுருட்டிக்கொண்ட துயரம் அப்போது நிகழ்ந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சுனாமி அலைகளால் வாரிச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

அதே போன்றதொரு தாக்குதலை இப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நடத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இதுவரை இந்தியாவில் இல்லாத அளவில், நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில், 2 லட்சத்து 739 பேரை இந்த கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 74 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

கொரோனா ருத்ரதாண்டவமாடி வருகிற மராட்டிய மாநிலத்தில் மட்டுமே நேற்று 58 ஆயிரத்து 952 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. டெல்லியில் 17 ஆயிரத்து 282 பேருக்கு இந்த வைரஸ் தொற்று 24 மணி நேரத்தில் தாக்கி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகி உள்ள முதல் 5 மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

நேற்று நாடு முழுவதும் கொரோவால் 1,038 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். நேற்று முன்தினத்துடன் (1,027) ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்றே அதிகம்.

நேற்று பலியான 1,038 பேரில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 278 பேர் அடங்குவார்கள். சத்தீஷ்காரில் 120, டெல்லியில் 104, குஜராத்தில் 73, உத்தரபிரதேசத்தில் 67, பஞ்சாப்பில் 63, மத்திய பிரதேசத்தில் 51 பேர் இறந்துள்ளனர்.

நேற்று அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 9 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மட்டுமே கொரோனா உயிர்ப்பலியில் இருந்து தப்பி உள்ளன.

இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம், 1.23 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சை பெற்று வந்ததின் பலனாக நேற்று ஒரே நாளில் 93 ஆயிரத்து 528 பேர் நலம் பெற்று, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து நலம்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 564 ஆக அதிகரித்து இருக்கிறது.

நேற்று அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 39 ஆயிரத்து 624 பேர் நலம் பெற்று வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

பிற மாநிலங்களை பொறுத்தமட்டில், டெல்லியில் 9,952 பேர், சத்தீஷ்காரில் 4,633 பேர், உத்தரபிரதேசத்தில் 4,517 பேர், கர்நாடகத்தில் 4,364 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நலம் பெற்றனர்.

இந்தியாவில் கொரோனாவில் நலம்பெற்றவர்கள் விகிதம், 88.31 சதவீதமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 36-வது நாளாக நேற்று அதிகரித்தது. குறிப்பாக ஒரே நாளில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 173 பேர் புதிதாக சிகிச்சையில் சேர்ந்தனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 14 லட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 10.46 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 13 லட்சத்து 84 ஆயிரத்து 549 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 26 கோடியே 20 லட்சத்து 3 ஆயிரத்து 415 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கும். இதுவரையில் 11 கோடியே 44 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி திருவிழாவால் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைச்சுத்தம் பராமரித்தல் ஆகிய 3 செயல்களும் கவசமாக கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘கொரோனா தொற்று தடுப்பில் அடுத்த 2 வாரங்கள் சவாலானவை’ சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

வளசரவாக்கம் அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிருபர்களை சந்தித்த அவர் பேசும்போது, தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 985 உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் முககவசம் அணியாது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 லட்சத்து 39 லட்சம் பேரிடம் ரூ.5.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு முதற்கட்டமாக 54 லட்சத்து 85 ஆயிரம் கொரோனா தடுப்பு ஊசி வந்துள்ளது. இதில் 40 லட்சத்து 99 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. வரக்கூடிய அடுத்த 2 வாரங்கள் கொரோனா தாக்கம் மிக வீரியமாக இருக்கும் என்பதால் தடுப்பு நடவடிக்கை நமக்கு சவாலானது. முக கவசம் அணிவது, வெளியூர் பயணங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமக்கள் ஒத்துழைப்பு நமக்கு தேவை. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தள்ளிவைக்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று 15.04.2021  (வியாழக்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதத்துக்கு தள்ளிப்போனது. அதன்படி, அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற இருப்பதால், அதற்கு மறுநாள் நடக்க இருந்த பிளஸ்-2 மொழிப்பாடத் தேர்வை மட்டும் வேறொரு நாளுக்கு தள்ளி வைத்து அரசுத் தேர்வுத்துறை கடந்த 12-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 5-ந் தேதி (புதன்கிழமை) ஆங்கிலம் பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால், அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்தும் மத்திய கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அந்தவகையில் தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், பிளஸ்-2 தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பொதுத்தேர்வை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜெயந்தி, லதா, அமிர்தஜோதி, நிர்மல்ராஜ், பள்ளிக்கல்வி இயக்குனர் உள்பட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா? அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து 12-ம் வகுப்புக்கு தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடந்து வந்தன. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

அந்தவகையில் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 7-ந் தேதி வரையிலும், அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் இந்த நிலையில், மாணவர்களும் அதற்கு ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். தேர்வுக்கான பணிகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டில் உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட இந்த முறை அதிகளவில் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் எழுந்தது. இதேபோல், காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேரடியாக இதில் தலையிட்டு, தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியாவும் அதிகளவில் கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் தேர்வை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசை வலியுறுத்தினர். சிவசேனா தரப்பில் கல்வித்துறை அமைச்சகத்துக்கு நேரடியாக கடிதமும் எழுதப்பட்டது. அதில், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை மாற்றி வேறொரு நாளில் வைக்கலாம் என்று தெரிவித்து இருந்தனர்.

இதுதவிர, சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆன்லைன் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர். மேலும், ‘தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்ற “ஹேஷ்டேக்”கும் டுவிட்டரில் டிரென்டிங் ஆனது.

இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று அவசரமாக நடந்தது. இதில் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாணவர்களின் நலனே அரசின் முதன்மை முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தற்போது பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் இருக்கிறது. சில மாநிலங்களில் அதன் பரவல் அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு, மாநில வாரியத்தை போல் அல்ல. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்துவது அவசியம். எனவே மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி நலனை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இதுதொடர்பாக வருகிற ஜூன் 1-ந் தேதி நிலைமையை சி.பி.எஸ்.இ. ஆய்வு செய்யும். தேர்வுகள் நடைபெறுவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பு அது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

அதேபோல், அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தால் உருவாக்கப்பட உள்ள வழிமுறையின் அடிப்படையில் அதற்கான தேர்வு முடிவுகள் தீர்மானிக்கப்படும். மாணவர்கள் யாராவது தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி அடையாவிட்டால், நிலைமை சீரடைந்த பிறகு, தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 10-ம் வகுப்பு தேர்வை 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்பு தேர்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும் என மொத்தம் சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகளும், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாணவ-மாணவிகளும் எழுத இருந்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனா 2ம் அலை எதிரொலி: மகாராஷ்டிராவில் நாளை இரவு முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்...அம்மாநில முதல்வர் உத்தவ் அறிவிப்பு.!!!

கொரோனா தொற்று அதிகரிப்பதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்று தீயாய் பரவி வருகிறது. இதனால் அங்கு இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் 14 நாள் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின்றன. இதனால், மகாராஷ்டிராவில் இருந்து தினமும் குடும்பம் குடும்பமாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, நாங்கள் தொடர்ந்து எங்கள் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம், ஆனால் அவை அழுத்தத்தில் உள்ளன. மருத்துவ ஆக்ஸிஜன், படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது, மேலும் ரெம்டெசிவிர் தேவை அதிகரித்துள்ளது. அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் வழங்குவதில் எங்களுக்கு ஐ.ஏ.எஃப் உதவி வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்வேன் என்றார்.

மேலும், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு ஊரடங்குக்கு இணையான கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை இரவு 8 மணி முதல் மே 1-ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 144 தடை அமலில் உள்ள நாட்களில் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை மக்கள் தவிக்க வேண்டும். மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது போக்குவரத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே உள்ளூர் ரயில் மற்றும் பஸ் சேவைகள், பெட்ரோல் பம்புகள், SEBI தொடர்புடைய நிதி நிறுவனங்கள் செயல்படும். கட்டுமானப் பணிகள் தொடரும். ஹோட்டல் / உணவகங்கள் மூடப்படாமல் இருக்க, பார்சல் மற்றும் வீட்டு விநியோகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சினிமா அரங்குகள், தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், கேளிக்கை பூங்காக்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள் மூடப்பட உள்ளன. படங்கள், சீரியல், விளம்பரங்கள் மூடப்பட உள்ளன. அத்தியாவசிய சேவைகளைச் செய்யாத அனைத்து கடைகள், மால்கள், ஷாப்பிங் மையங்களும் இரவு 8 மணி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 7 மணி வரை, மே 1 ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உச்சத்தை தொடும் கொரோனா தொற்று 150 மருத்துவர்கள் உடனே சென்னை வர உத்தரவு: தமிழக அரசு அவசர நடவடிக்கை

சென்னையில் கொரோனா பரவல் உச்சம் அடைந்து வருவதால் 150 கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனடியாக சென்னைக்கு வரும்படி தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் வெறும் ஆயிரக் கணக்கில் மட்டுமே பரவல் எண்ணிக்கைக் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிப்படையத் தொடங்கியுள்ளனர்.

அதேசமயம், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தனது தீவிர தன்மையைக் காட்டி வருவதால் இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 4 ஆயிரம் என்ற வகையில் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு கணக்கு 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பரவும் வேகம் ஒவ்வொரு நாளும் இருமடங்காகி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

 இதை சமாளிக்க சென்னை மாநகராட்சி மீண்டும் பள்ளி, கல்லூரிகளை கொரோனா முகாம்களாக மாற்றி வருகிறது. கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போன்று வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தையும் மீண்டும் தொடங்கியுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்து வருகிறது. ஆனாலும் அரசு பொதுமருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டுகள் எல்லாம் நிரம்பி வருகிறது. இதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொரோனா முகாம்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் ஒரு நாள் பாதிப்பு என்பது மிக மோசமாக உள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையிலும் மருத்துவ குழுக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. முதல் அலையின் போதும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மருத்துவ பணியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

 அதைப் போன்று இப்போதும் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் காய்ச்சல் முகாம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் முகாம்களுக்கு அவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.. இப்போதும் வெளி மாவட்டங்களிலும் இருந்து 150 மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை வரவழைக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தப் படுகின்றனர்.

இந்த தற்காலிக பணிகளுக்காக இந்திய மருத்துவ கழகத்திடம் தமிழக சுகாதாரத்துறை பட்டியல் கேட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு நாட்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் உடனடியாக சென்னை வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனரகம் 3,500 செவிலியர்களை கொரோனா பணிக்காக கூடுதலாக பணியமர்த்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 11மருத்துவ கல்லூரிக்கு அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2,500 செவிலியர்கள் 11 மருத்துவ கல்லூரிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்லூரி திறக்கப்படும் வரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல கொரோனா தொற்று கூடுதலாக உள்ள மாவட்டங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்களை அதிகப்படுத்த உள்ளனர்.  கூடுதலாக பணியமர்த்தப்பட உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா முகாம்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் தற்காலிகமாக ஈடுபடுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த பாதிப்பின் காரணமாக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் அதிகளவில் இந்த மாவட்டங்களுக்கு தேவைப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவ குழுவினர் இங்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள் அழைக்கப்பட்டு ஓரிரு நாளில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுனில் அரோரா ஓய்வு: புதிய தலைமை தேர்தல் கமிஷனராக சுசில் சந்திரா நியமனம் இன்று பதவி ஏற்கிறார்

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக சுசில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவி ஏற்கிறார்.

தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து வந்த சுனில் அரோரா நேற்று ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

இந்தநிலையில், புதிய தலைமை தேர்தல் கமிஷனராக தற்போதைய தேர்தல் கமிஷனர் சுசில் சந்திரா நேற்று நியமிக்கப்பட்டார். இத்தகவலை மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது.

சுசில் சந்திரா, கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதியில் இருந்து தேர்தல் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

தலைமை தேர்தல் கமிஷனராக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கிறார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14-ந் தேதி முடிவடைகிறது.

அவரது தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்த உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியரை இடமாற்றம் செய்ததை களங்கப்படுத்தியதாக கூற முடியாது ஐகோர்ட்டு கருத்து

குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசு ஊழியரை பணியிடமாற்றம் செய்ததை, களங்கப்படுத்தியதாக கேள்வி எழுப்ப முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் சீனிவாசன். இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து, வக்கீல்கள் வாதத்துக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைக்க கூடும் என்ற அடிப்படையில், சீனிவாசனை சேலத்தில் இருந்து திருப்பூருக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சீனிவாசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் சாட்சியை கலைத்து விடுவார் என்று கூறுவது கற்பனையே. இதன் அடிப்படையில் இடமாற்றம் செய்து மனுதாரருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், “நிர்வாக அடிப்படையில் மட்டுமே மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கூற முடியாது” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு பதிலாக இடமாற்றம் செய்யலாம் என்றும், அந்த நடவடிக்கையை களங்கமாக கருத முடியாது என்றும் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. நம்பிக்கை மோசடி மற்றும் குற்ற வழக்கில் தொடர்பு போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களை பணிமாற்றம் செய்யலாம்.

அதை களங்கம் விளைவிப்பதாக கருதி கேள்வி எழுப்ப முடியாது. மனுதாரருக்கு எதிரான வழக்கை மே மாதம் இறுதிக்குள் விசாரித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாக்கு எண்ணிக்கையால் மே 3-ந்தேதி தேர்வு மட்டும் மாற்றம் திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு தமிழக அரசு அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கையால் மே 3-ந்தேதி தேர்வு மட்டும் 31-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. அதன் பிறகும் நோய்த்தொற்று குறையாததால் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டன.

பின்னர், நோய் பாதிப்பு சற்று குறைந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேரடி வகுப்புகள் தொடங்கிய சில நாட்களிலேயே நோய் தொற்றின் தாக்கம் மீண்டும் உயர்ந்தது. அதுவரையில் 9-ம் வகுப்புக்கு இறுதி தேர்வும், 10 மற்றும் 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடைபெறும் என்று தெரிவித்து வந்த நிலையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார்.

ஆனால் உயர் கல்விக்கு அடித்தளமாக இருக்கும் பிளஸ் -2 பொதுத் தேர்வு மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 3- ந் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேர்வு ரத்து செய்யப்படும் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னோட்டமாக வருகிற 16- ந் தேதி செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில், மே 2-ந்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதற்கு மறுநாள் (3-ந்தேதி) பிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால், அன்றைய நாளில் (மே 3-ந்தேதி) நடைபெற இருந்த தேர்வு தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி அதே நாட்களில் நடக்க இருப்பதாகவும் அரசு தேர்வுத் துறை நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ் -2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடைபெறுவதால், 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த மொழிப் பாடத் தேர்வு மட்டும் 31-ந்தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த தேதிகளிலேயே நடைபெறும். மேலும் தேர்வுகள் நடைபெறும்போது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மே 5-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கும் ஆங்கில தேர்வில் இருந்து பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் 17 முதல் 19 வரை நடக்கிறது: உதவி வேளாண் அலுவலர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
  • பிப்ரவரி 5ம் தேதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்ட அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்து தேர்வு வரும் 17, 18 ஆகிய நாட்களில் காலை மற்றும் மாலையிலும், 19ம் தேதி காலையில் மட்டும் 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
  • நுழைவுச்சீட்டுகள் . www.tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பெறலாம்
  • கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தா்ள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.
  • எந்த ஒரு தேர்வரும் காலை நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்தில் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • விரைவுத் தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
  • தேர்வு அறைக்கு மொபைல்போனை கொண்டு செல்ல அனுமதியில்லை. எனவே, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தேர்வில் தொடரும் தவறுகள்: 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் தொடர்ந்து தவறுகள் நடக்கும் நிலையில் அங்கு பணியாற்றிய பொறுப்பற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 9 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வே.கவுதமன், வி.லட்சுமிகாந்தன், பா.தாமோதரன், ஜெ.சிமியோன் ஆகியோர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அளித்த தீர்ப்பு வருமாறு:-

இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணிகளுக்கான பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளில் பங்குபெற்றவர்கள் ஆவர்.

இவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்வுகளில் மனுதாரர்கள் சரியான விடை அளித்திருந்தபோதும் சில வினாக்களுக்கு விடைகளை தவறாக எழுதியுள்ளதாக கூறி குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில்தான் மனுதாரர்கள் விடைகள் அளித்துள்ளனர். இருந்தாலும், தங்களுக்கு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்படாததால் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறியிருந்தனர்.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் மற்றும் விடைக்குறிப்புகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் வடிவமைக்கப்பட்ட விடைக்குறிப்பு அதிருப்தி அளிப்பதாகவும், ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களின் வாழ்வை மனதில்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

அந்த கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும், இனி அதுபோன்ற தவறு நிகழாது என்றும் ஐகோர்ட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதி அளித்தாலும், தொடர்ந்து பல தேர்வுகளில் தவறான விடைக்குறிப்புகளையே பதிவிட்டு வருகிறது என்று விசாரணையின்போது மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பொது உத்தரவை தகவல் ஆணையம் பிறப்பிக்கிறது. ஒரு தவறு நடைபெற்றால் அது மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தலைமைப் பதவிகளில் இருப்பவர்களின் கடமை. ஆனால் அதே தவறு ஒவ்வொரு தேர்விலும் மீண்டும் மீண்டும் நடக்கிறது.

தவறான விடைக்குறிப்பை வெளியிடுவது, தேர்வில் கால தாமதம் செய்வது, ரத்து செய்வது, தேர்வை நடத்தினாலும் முழுமையான பணி நியமனத்தை செய்யாதது போன்ற தவறுகள் திரும்பத் திரும்ப நடக்கின்றன.

இதே பிரச்சினையில் பல மேல்முறையீட்டு வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனுதாரர் கூறிய பிரச்சினைகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்பது தெளிவு.

வினாத்தாள்கள், விடைக்குறிப்புகள் போன்றவற்றை உயர் பதவியில் இருப்பவர்கள்தான் தயார் செய்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முக்கிய பணியில் உள்ளவர்கள் பொறுப்பற்ற தன்மையில் செயல்படுவதால், பணி நியமனங்கள் முழுமையடையாமல் போகின்றன. இதனால் அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித்தேர்வுகளில் தவறான விடைத்தாள்கள், விடைக்குறிப்புகளை தயார் செய்ததாக கோர்ட்டு அல்லது விசாரணை அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டால், அவற்றை தயார் செய்தவர்களின் பணிப் பதிவேடுகளில் ‘தவறாக தயார் செய்தவர்கள்’ என்று பதிவு செய்வதோடு, ஒழுங்கு நடவடிக்கையையும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் எடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் மீண்டும் அந்த பணிகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இரண்டு செல்போன் எண்களும், தொலைபேசி எண்ணும் எப்போதுமே வேலை செய்வதில்லை. எப்போதாவது அழைப்பை எடுக்கும் அதன் பணியாளர்கள், ‘இணையதளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டுமே கூறுகின்றனர். ஆனால் இணையதளத்தில் முழுமையான தகவல் எதுவும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்பது மனுதாரரின் குற்றச்சாட்டாகும்.

எந்த பிரச்சினையும் இல்லாமல் முழுமையாக தேர்வுகளை நடத்தி முடித்து முழுமையான பணி நியமனத்தை முடிக்கத் தெரியாத அதிகாரிகள், அனுபவம் இல்லாத மற்ற அரசு பணிகளை செய்வது மற்றும் மற்ற பொது அதிகார அமைப்புகளை சிறப்பாக நிர்வாகம் செய்யாதது போன்ற காரணங்களால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்களாக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சுர்ஜித் கே.சவுத்திரி (2011-2013), விபு நய்யர் (2013-2017), காகர்லா உஷா (2017), டி.ஜெகநாதன் (2017), கே.சீனிவாசன் (2018), கே.நந்தகுமார் (2018), எஸ்.ஜெயந்தி (2018), என்.வெங்கடேஷ் (2018-2019), ஜி.லதா (2019-2020) ஆகியோரின் பணிப்பதிவேடுகளில் பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மையோடு செய்யவேண்டிய பணிகளை சரியாக செய்யவில்லை என்று பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்களின் பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையாக கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தமிழக தலைமைச்செயலாளர் எடுக்க வேண்டும் என்று தகவல் ஆணையம் பரிந்துரை செய்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் சுர்ஜித் கே.சவுத்திரி ஏற்கனவே ஓய்வுபெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரிக்கை

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மாற்றாக ஆன்லைனில் தேர்வு நடத்தவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

கொரோனாவின் 2-வது அலை வீசுவதால் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உச்சநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து கொரோனாவுக்கு எதிராக மீண்டும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும், இதற்கிடைய பள்ளிகளை மூடுவது, தேர்வுகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.), மத்திய பள்ளி தேர்வு கவுன்சில் ஆகியவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 10,12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்துவது என்று முடிவு செய்திருந்தன. செய்முறை தேர்வுகள் நடந்துள்ள நிலையில், ஜூனில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் “கேன்சல்போர்டு எக்ஸாம்-2021” என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.

மேலும் சேஞ்ச்.ஆர்க் (change.org) இணையதளம் வழியாக, ஒரு மனு பிரபலமாக அதிகம் பேரால் பகிரப்பட்டது. அந்த மனுவில், “இந்தியாவில் கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் ஒருசிலருக்கு பாதிப்புகள் தொற்றியிருந்த நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இப்போது பாதிப்புகள் உச்சம் தொட்டிருக்கும் நிலையில் பள்ளிகள் திறந்திருப்பதும், தேர்வுக்கு ஆயத்தமாவது பற்றியும் கல்வித்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மனுவை ஆதரித்து பகிர்ந்து உள்ளனர்.

திவ்யா கார்க் என்ற 10-ம் வகுப்பு மாணவி, “தனது டுவிட்டர் பக்கத்தில் அரசாங்கம் தேர்வை குறைந்தது ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்து, கொரோனா பாதிப்பு நிலைமைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்” என்று கூறி உள்ளார். மற்றொரு மாணவர் குறிப்பிடும்போது, “ஆன்லைனில வகுப்புகள் நடந்ததுபோல ஆன்லைனில் தேர்வுகள் நடத்தலாம் அல்லது முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்” என்று கூறி உள்ளார்.

வழக்கமாக சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஜனவரி கடைசியில் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் தாமதமாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் அது மேலும் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது.

ஆனால் சி.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் நலன் கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. கூடுதலான தேர்வறைகள், அதிக சமூக இடைவெளியுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது’ என்றார்.

மத்திய பள்ளிகள் தேர்வு கவுன்சில் அதிகாரி கூறும்போது, ‘தேர்வு அட்டவணைகள் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை’ என்றார். தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது பற்றி அவர்கள் எவ்வித தகவலையும் உறுதிசெய்யவில்லை.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மார்ச் இறுதியுடன் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் பின்னரும் நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டின் இறுதியில் நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் தொடங்குவது பற்றி கல்வித்துறை ஆலோசித்தது.

அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், பள்ளிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 4 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை திட்டமிட்டப்படி நடத்துவதா? அல்லது தேர்வை ஒத்திவைக்கலாமா?, தேர்வை நடத்துவது என்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியவை எவை? என்பது குறித்து கல்வித்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் வெங்கடேஷ் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே கடந்த 5-ந்தேதி கல்வித்துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அரசு தரப்பில் இருந்து சில அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 11-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படும் மத்திய அரசு நடவடிக்கை

அரசு மற்றும் தனியார் பணித்தளங்களில் வருகிற 11-ந்தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடு்ப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பயனாளர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக பரவி வருகிறது. நாள்தோறும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருவதுடன், 500-க்கும் மேற்பட்டோர் உயிரையும் பறிகொடுத்து வருகின்றனர்.

இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் மத்திய-மாநில அரசுகள், மறுபுறம் தடுப்பூசி போடும் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் பணித்தளங்களிலேயே தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பொருளாதரத்தின் அமைப்பு சார்ந்த துறைகளிலும், வழக்கமான பணி அலுவலகங்கள் (அரசு மற்றும் தனியார்), உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் கணிசமான விகிதத்தில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பணியாற்றுகின்றனர்.

இந்த மக்களிடையே தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, 100 சதவீத பயனாளர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் கொண்ட இத்தகைய பணித்தளங்களில் (அரசு மற்றும் தனியார்) தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதற்காக தடுப்பூசி மையங்களுடன் இந்த பணித்தளங்களை இணைக்க வேண்டும்.

இதற்காக அரசு மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி இந்த பணித்தள தடுப்பூசி திட்டப்பணிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணித்தள தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கப்படலாம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனாவின் 2-வது அலைக்கு காரணம் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை எழுச்சி பெற காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

டாக்டர் கிரிதரா ஆர்.பாபு (தொற்றுநோய்த்துறை தலைவர், இந்திய பொது சுகாதார நிறுவனம்):-

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணங்கள் உண்டு. புதிய வகை கொரோனா பரவலை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட நிச்சயமாக தொற்று பரவல் அதிகரிப்பில் அவற்றுக்கு பங்கு உண்டு. அவற்றில் சில நோய் எதிர்ப்பு தன்மைக்கு தப்பிப்பவையாகவும், முந்தைய வைரஸ்களை விட வேகமாக பரவுபவையாகவும் உள்ளன. பிரேசில் வகை கொரோனாவை பொதுவாக நோய் எதிர்ப்புச்சக்தி கண்டறிவதில்லை. இதே போன்று தென்ஆப்பிரிக்க வகையில், துணை குழுக்களும் உள்ளன. அதுவும் ஆன்டிபாடிகளால் கண்டறியப்படுவதில்லை.

இந்தியாவில் தடுப்பூசி போடுவது, எந்த அளவுக்கு வேகமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்த அளவுக்கு இப்போதைய வேகம் இல்லை. ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது திருப்திகரமாக இல்லை.

பாதிப்பு ஏற்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி குறைந்தபின்னர் மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது விரிவாக ஆராயப்படவில்லை. இதன்விளைவாக நிறைய எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

சுற்றுச்சூழல் காரணங்களும், சமூக நடத்தையும் கொரோனா பரவலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுக்கூட்டங்கள், திருமணம் போன்ற விழாக்களில் பங்கேற்கிறபோது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பாகிறது.

டாக்டர் என்.கே.அரோரா (தொற்றுநோயியல் நிபுணர்):-

4 அல்லது 5 காரணிகள் ஒரே நேரத்தில் சேர்ந்து செயல்படுவதால் தொற்று பரவல் அதிகரிக்கிறது. வைரஸ் பரவல் அலைபோல வருவது இயல்பான ஒன்றுதான். கொரோனா பரவல் பற்றிய பயம், முதல் 6 மாதங்களில் இருந்த அளவுக்கு இப்போது இல்லை. குறைந்து விட்டது. பொருளாதாரம் எல்லாவற்றையும் திறந்து விட்டது. மக்கள் வெளியே வருகிறார்கள். ஆனால் கொரோனா கால நடத்தைகளில் கவனக்குறைவு உள்ளது. கூட்டம் கூடுவது அதிகரித்து இருக்கிறது. இது லேசான நோய் என்ற எண்ணமும் வந்து விட்டது. முக கவசம் அணிவது மிகவும் குறைந்து விட்டது. புதிய வகை கொரோனாவும் பரவல் அதிகரிக்க ஒரு காரணம்தான்.

பேராசிரியர் ஜெயபிரகாஷ் முலியில் (வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர்):-

கொரோனா பற்றிய கவலை மக்களிடம் குறைந்துள்ளது. முதலில் மக்கள் பயந்தனர். ஆனால் இப்போது அதே மக்களிடம் பயம் குறைந்து இருக்கிறது. புதிய வகை கொரோனாவால் தாக்குதல் விகிதம் அதிகரிக்கக்கூடும்.

முந்தைய பாதிப்பால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை புதிய வகை கொரோனா பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கான ஆதாரம் தற்போது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு பஞ்சாப் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அரசியல் கூட்டங்களுக்கு தடை

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பஞ்சாப் முழுவதும் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்று, பஞ்சாப். இங்கு 2.57 லட்சத்துக்கும் அதிகமானோர், வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். 7,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைப்பதற்காக அங்கு 12 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று உத்தரவிட்டார்.

இந்த ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும். வரும் 30-ந்தேதிவரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று கூறுகையில், “கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அரசியல் பொதுக்கூட்டங்களில் கெஜ்ரிவால், சுக்பீர் பாதல் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டது ஆச்சரியம் அளிக்கிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளிடம் நான் கூறியும் கண்டுகொள்ளப்படவில்லை. எனவே அரசியல் தொடர்பான கூடுகைகளுக்கு தடை போட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தும்படி போலீஸ் டி.ஜி.பி. டிங்கர் குப்தாவுக்கு முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் கூடாது:அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது. தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட்டு, தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அரியர் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசு அறிவித்தது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது விதிகளுக்கு முரணானது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்தன. இந்த நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், சட்டப்படிப்பு, விவசாயப் படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியர் படிப்பு உள்ளிட்ட படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து இந்த படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன’ என்றார்.

மேலும், ‘பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு வக்கீல், ‘கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தேர்வுகள் நடத்தவேண்டாம் என்று யு.ஜி.சி. தெரிவிக்கவில்லை’ என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தினார்கள்.

மேலும், ‘தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

‘கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல், ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE