இடைநிற்றலைத் தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு; நடமாடும் பள்ளிகள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகப் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரித்துள்ளதை அடுத்து, வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளுதல், நடமாடும் பள்ளிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது.

கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு கல்வியாண்டே முடியவடைய உள்ளது. பல்வேறு மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சரிசெய்யும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

''படிப்பைப் பாதியில் நிறுத்தியோர், குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் காண்பது அவசியம். பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை மதிப்பிட வேண்டும்.

பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கத் திட்டமிட வேண்டும். குறையும் மாணவர் சேர்க்கை, கற்றலில் குறைபாடு ஆகியவற்றைச் சரிசெய்வது குறித்தும் தீவிரமாகத் திட்டங்களைச் செயலாற்ற வேண்டும்.

கரோனாவால் 6 முதல் 18 வயது வரையில் பள்ளியை விட்டு வெளியேறிய குழந்தையை முறையாகக் கண்டறிய, வீடு வீடாகச் சென்று விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

வாய்ப்புள்ள பகுதிகளில் நடமாடும் பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களை கிராம அளவில் சிறு குழுக்களாகப் பிரித்துப் பாடம் கற்பிக்கலாம்.

ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடியாத கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தொலைக்காட்சி அல்லது வானொலி மூலம் பாடங்களைக் கற்றுத்தர வேண்டும். சரியான நேரத்தில் சீருடை, பாடப்புத்தகங்கள், மதிய உணவு ஆகியவை எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளைத் திறந்த உடனேயே மாணவர்களை ஆற்றுப்படுத்தும் விதமாகப் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளிச் சூழலுக்கு மீண்டும் மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் பொருந்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் இழந்த காலத்தைக் கணக்கில் எடுத்து, பாடத் திட்டங்களைக் குறைக்க வேண்டும். பாடத் திட்டத்தைத் தாண்டி படைப்பாற்றலை ஊக்குவிக்கும் எழுத்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றை மாணவர்களிடையே ஊக்குவிக்கலாம்''.

இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment