மருத்துவ படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்: 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் மேலும் 47 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்று தொடங்குகிறது

மருத்துவ படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் மேலும் 47 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருக்கிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

2020-21-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு கடந்த நவம்பர் மாதம் 18-ந் தேதி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதலாவதாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன்படி, நவம்பர் 18 முதல் 21-ந் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் 399 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவ கல்வி இடங்களை பெற்றனர். இவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் மருத்துவ படிப்பு முதற்கட்ட கலந்தாய்வு நிறைவில் காலியாக உள்ள மருத்துவ படிப்பு இடங்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீடு வழங்கி, அதில் இருந்து மீண்டும் திரும்ப பெறப்பட்ட இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

அதன்படி, நேற்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் இடங்கள் நிரப்பப்பட்டன. ஏற்கனவே தரவரிசை பட்டியலில் இடம்பெற்று முதற்கட்ட கலந்தாய்வில் பங்கு பெற்று, இடங்களை தேர்வு செய்யாமல் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மாணவ-மாணவிகள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று காலை தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ஏற்கனவே 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் இடம்பெற்ற மாணவர்கள் தற்போது இருக்கும் காலியிடங்களில் மறு ஒதுக்கீடு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு பிறகே கலந்தாய்வு தொடங்கியது. 47 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் வழங்கப்பட்டது.

7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்தும் சுயநிதி கல்லூரிகளில் நம்மால் கட்டணம் செலுத்த முடியாது என்று எண்ணி இடங்களை வேண்டாம் என்று சொன்ன சிலர், அரசே கட்டணம் செலுத்த முன்வந்ததால், தங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தினர். அதன்படி, முன்னுரிமை அளித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது என்று மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்மூலம் நடப்பு கல்வியாண்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் 446 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி காலை வரை நடைபெற இருக்கிறது. மேற்சொன்ன நாட்களில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்வதற்கான அழைப்பாணையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment