வருகிற 28-ந்தேதி தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தைப்பூச திருவிழாவான வரும் 28-ந்தேதி அரசு பொது விடுமுறை விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், மே தினம், ரம்ஜான், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என முக்கிய மற்றும் பண்டிகை நாட்களில் அரசு விடுமுறை விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2021-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டிருந்தது.

அதில், ஆங்கில புத்தாண்டில் தொடங்கி கிறிஸ்துமஸ் வரை 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தைப்பூச திருவிழாவும் அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. இந்த மாதம் 28-ந்தேதி (வியாழக்கிழமை) தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகும்.

இது தொடர்பாக, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் கடவுளாகிய முருக பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூச திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று இரவு அரசாணை வெளியிட்டது. இதுகுறித்து தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருநாளை பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்க ஆணையிடப்படுகிறது.

இந்த பொது விடுமுறை, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசினால் அமைக்கப்பட்ட வாரியங்கள், கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

பிற நிறுவனங்களும் இந்த விழாவின் சிறப்பை கருத்தில் கொண்டு தங்களின் அலுவலர்கள், ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment