பள்ளிக்கூடங்கள் 19-ந் தேதி திறப்புமாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்பெற்றோர் சம்மதம் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிக்கூடம் திறக்கப்படும் போது மாணவர்களின் வருகை தொடர்பாக பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்திருந்த காரணத்தினால் அரசும் பள்ளிகளை திறக்க முடிவு செய்து இருக்கிறது.

அதன்படி, வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும், பள்ளி வளாகங்களில் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்?, மாணவர்களை எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?, நோய்த் தொற்று காலமாக இருக்கும் சூழ்நிலையில் என்ன மாதிரியான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? போன்றவை அடங்கிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருக்கும் முக்கிய அறிவுரைகள், அம்சங்கள் வருமாறு:-

* ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் இருந்தால் கூடுதல் வகுப்பறைகளை அமைத்து அதிக மாணவர்களுக்கு இடமளிக்கலாம்.

* இணையவழி, தொலைதூர கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும். பள்ளிகள் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தும்போது, சில மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்கள் அவ்வாறு கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம்.

* தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்க வேண்டும்.

* பெற்றோரின் இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டில் இருந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம்.

*மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்கவேண்டும்.

* அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முக கவசங்களை கட்டாயம் அணியவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்படும்.

* அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத்துறையால் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். உடல்வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

* கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். வகுப்பறைகளில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது, குறைந்தபட்சம் இருக்கைகளுக்கு இடையே 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும்.

* வானிலையை பொறுத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளையும் கருத்தில் கொண்டு, ஆசிரியர்-மாணவர்கள் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்காக வகுப்பறைக்கு வெளியே உள்ள இடங்களையும் பயன்படுத்தலாம்.

* பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரையில் சரியான வட்டம், சதுரம் போன்ற குறியீடுகள் செய்யப்பட வேண்டும்.

* பொதுவாக சராசரி உடல் வெப்பநிலை 98.6 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். சில ஆய்வுகள் சாதாரண உடல் வெப்பநிலை 97 முதல் 99 டிகிரி செல்சியஸ் வரை அளவில் இருக்கும் என்று காட்டுகின்றன. எனவே 37.2 செல்சியஸ் அல்லது 99 டிகிரி பாரன்ஹீட்க்கும் மேல் வெப்பநிலை காணப்படும் நபர்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழைவதை தடை செய்யப்படுவதுடன், அருகில் உள்ள சுகாதார மையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரைக்கப்பட வேண்டும்.

* எந்தவொரு பொருளையும் (பாட புத்தகங்கள், குறிப்பேடுகள், பேனா, பென்சில், அழிப்பான், உணவு, தண்ணீர் பாட்டில்கள் போன்றவை) மாணவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வதை ஊக்குவிக்கக்கூடாது. தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு இடைவேளை நேரம் வழங்கப்படவேண்டும். மாணவர்கள் இடையே உணவுபகிர்வு அனுமதிக்கப்பட கூடாது. பள்ளியில் சத்துணவு சாப்பிடாத மாணவர்கள் வீட்டில் இருந்து சமைத்த உணவை கொண்டுவந்து சாப்பிடுவதை ஊக்குவிக்கவேண்டும்.

* கழிவறைகளில் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தவேண்டும். ஆய்வக பயிற்சி நடவடிக்கைகளுக்கு சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இட அளவுகளை அடிப்படையாக கொண்டு ஒரு அமர்வுக்கு அதிகபட்சம் எத்தனை மாணவர்கள் இருக்கவேண்டும் என திட்டமிடப்பட்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment