சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி உத்தரவு ரத்து செய்யப்படுமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி கடந்த நவம்பர் 10-ந் தேதியில் இருந்து சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் அரங்கங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அங்குள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடிப்படையாக கொண்டு, சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்களில் வாடிக்கையாளர் அமரும் இருக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.


இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்று நடிகர் விஜய் நேரடியாக சந்தித்து பேசினார். சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம், அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில், சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் அரங்கங்களில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 50 சதவீத இருக்கைகளின் எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பிக்கிறது.


அங்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பார்வையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சினிமா காட்சி நேரத்தில் தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணையை கண்டித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகத்திற்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பால்லா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-


கொரோனா தொற்று தொடர்பாக ஊரடங்கு உத்தரவை 31-ந் தேதி வரை நீட்டித்து கடந்த டிசம்பர் 28-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் முன்எச்சரிக்கை ஆகியவை குறித்த வழிகாட்டிகள் வெளியிடப்பட்டன.


அதில், கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.


ஆனால் 4-ந் தேதியன்று இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள மொத்த இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் டிசம்பர் 28-ந் தேதியிட்ட உத்தரவை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது.


மத்திய அரசின் வழிகாட்டு உத்தரவுகளை எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்றும், அவற்றை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் வழிகாட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ளதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


கொரோனா விவகாரங்களில் வழிகாட்டி உத்தரவுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை மாநில அரசுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 18-ந் தேதியன்று உத்தரவிட்டதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே கடந்த டிசம்பர் 28-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் வகையிலான உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment