10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் இன்று முதல் கருத்துக்கேட்பு அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடுகள் தீவிரம்

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் இன்று (புதன்கிழமை) முதல் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்திருப்பதால் பள்ளிகளை திறப்பது பற்றி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

இதற்கு முன்னதாக பள்ளிகளை திறப்பது குறித்து ஏற்கனவே பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று அரசு அறிவித்தது.

இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு முடிவுகளை மேற்கொள்ள கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 8-ந் தேதிக்குள் (நாளை மறுதினம்) கருத்துகளை கேட்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் தெரிவிக்க வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றன. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக அந்தந்த பள்ளிகள் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன.

சென்னையில் நேற்று இடைவிடாமல் மழை பெய்தது. மழை இன்றும் (புதன்கிழமை) தொடரும் என்பதால் சென்னையில் பெரும்பாலான பள்ளிகள் இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முன்வரவில்லை.

பள்ளிகளுக்கு வரும் பெற்றோரிடம் வெள்ளை தாள் வழங்கப்பட்டு, அதில் அவர்களுடைய கருத்துகளை பதிவிட்டு வழங்குவதற்கும், மாணவர்களுக்கு வகுப்புகளை திறக்கலாமா? ஆம் அல்லது இல்லை என்று குறிப்பிட்டும், வேறு ஏதாவது கருத்துகள் இருந்தால் அதில் தெரிவிக்கவும் ஒவ்வொரு பள்ளிகளும் ஏற்பாடு செய்து இருக்கின்றன.

இதன் முன்னோட்டமாக சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்காக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்தும், பள்ளிகளை திறந்தால் அதற்கு பள்ளி வளாகங்கள் தயார்நிலையில் இருக்கிறதா? என்பது குறித்தும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பள்ளிகள் திறக்கப்பட்டால் அதற்கு தயார்நிலையில் பள்ளி வளாகங்கள் இருக்கின்றனவா? என்பது பற்றி ஆய்வு செய்தோம். இதேபோல், அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்’ என்றார்.

No comments:

Post a Comment