10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

குடியரசு தின விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

இதில் சாரண, சாரணியர் இயக்க மாநில ஆணையரும், பள்ளிக்கல்வி இயக்குனருமான ச.கண்ணப்பன், சாரண, சாரணியர் இயக்க மாநில தலைவர் ப.மணி, சாரண, சாரணியர் இயக்க மாநில செயலாளரும், பள்ளிக்கல்வி இணை இயக்குனருமான (தொழிற்கல்வி) பூ.ஆ.நரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடக்கின்றன. இந்த ஆண்டு பொதுத்தேர்வு வழக்கமான முறையில் இருக்குமா?, ஏதாவது சலுகை இருக்குமா?

பதில்:- பொதுத்தேர்வை பொறுத்தவரையில், என்னென்ன மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி இருக்கிறோம். கல்வியாளர்கள் மற்றும் மற்றவர்களின் கருத்துகளும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொதுத்தேர்வு எந்த முறையில் நடக்க இருக்கிறது என்பதை அறிவிக்க உள்ளோம். சட்டமன்ற தேர்தல் வருகின்ற காரணத்தினால், பொதுத்தேர்வு அட்டவணையை எப்படி வெளியிடுவது? என்று ஆய்வு செய்து வருகிறோம். பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் விரும்புகிற வகையில், மாணவர்களின் உணர்வுக்கு ஏற்ற வகையில் பொதுத்தேர்வில் மாற்றம் இருக்கும். அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது.

கேள்வி:- 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்?

பதில்:- பெற்றோரிடம் ஏற்கனவே கேட்கப்பட்ட கருத்துகளில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்து இருந்தனர். அதில் 98 சதவீதம் பேரின் கருத்துகள் பரிமாறப்பட்டன. அதன்படி, முதற்கட்டமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11-ம் வகுப்பை பொறுத்தவரையில், முதல்-அமைச்சரோடு கலந்து ஆலோசித்த பிறகு முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

கேள்வி:- திருப்பூரில் ஆசிரியர் உள்பட மாணவர்கள் சிலருக்கு கொரோனா வந்திருக்கிறதே?

பதில்:- கொரோனா ஒரு மாணவருக்கு மட்டுமே வந்தது. அவர் அருகில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் பரவி இருக்கிறதா? என்று பரிசோதனை மட்டும் செய்யப்பட்டது. கொரோனா வராமல் தடுப்பதற்கான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வி துறை முறையாக செய்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment