பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோரிடம் மீண்டும் கருத்துக்கேட்க கல்வித்துறை உத்தரவு

பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்துகள் கேட்டு சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதால் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்துகள் கேட்க பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு அறிவித்தது போல் நவம்பர் 16-ந்தேதியன்று பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பெற்றோரின் கருத்துகள் ஏற்கப்பட்டு தற்காலிகமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்விநலன் கருதி பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்களை தயார்செய்ய வேண்டும் என்பதால் பள்ளிகளைத் திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிப்பது இன்றியமையாதது ஆகும்.

எனவே வருகிற 8-ந்தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் பள்ளிகளின் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

கருத்துக்கேட்பு கூட்டம் கொரோனா தொற்று தொடர்பாக அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவேண்டும். அதிகளவில் பெற்றோர் வரக்கூடிய பள்ளிகளில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தலாம். கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் பெற்றோர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். அதேபோல் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்கவேண்டும்.

இந்த கூட்டத்தில் பெற்றோர் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளை தொகுத்து அதை அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரின் கையொப்பம் பெற்று முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை அரசுக்கு சமர்ப்பிக்கும்வகையில் தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் என்பதை நினைவில்கொண்டு எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் கூட்டத்தை நடத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment