அடுத்த 5 ஆண்டுகளில் மாணவர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகை மத்திய மந்திரிசபை ஒப்புதல்

அடுத்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ரூ.59 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகை வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

எஸ்.சி. பிரிவு மாணவர்கள், 10-ம் வகுப்புக்கு பிறகும் படிப்பை தொடர உதவும் வகையில், ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்-எஸ்.சி.’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்படி, எஸ்.சி. பிரிவு மாணவர்கள், 11-ம் வகுப்பில் இருந்து எந்த படிப்பு படிப்பதற்கும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும்.

இத்திட்டத்துக்கு மேலும் உந்துதல் அளிக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய சமூக நீதித்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறியதாவது:-

இந்த திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59 ஆயிரத்து 48 கோடி முதலீட்டுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 60 சதவீத தொகையான ரூ.35 ஆயிரத்து 534 கோடி, மத்திய அரசு நிதியில் இருந்தும், மீதித்தொகை மாநில அரசு நிதியில் இருந்தும் வழங்கப்படும்.

இதன்படி, 4 கோடிக்கு மேற்பட்ட எஸ்.சி. பிரிவு மாணவர்கள் பலன் அடைவார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் மேற்படிப்பை வெற்றிகரமாக முடிக்க இது உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடுகளுக்கு நேரடியாக டெலிவிஷன் சேனல்களை வழங்கும் டி.டி.எச். சேவைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, டி.டி.எச். சேவைக்கு 20 ஆண்டு காலத்துக்கு உரிமம் வழங்கப்படும்.

மேலும், டி.டி.எச். துறையில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். இதுவரை 49 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது.

டெல்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளிலும், டெல்லி ஊரக பகுதிகளில் விவசாய நிலத்தில் வீடு கட்டியும் குடியிருப்பவர்களுக்கு தண்டனை நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு அளிக்க கடந்த 2011-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த சட்டம் விரைவில் காலாவதி ஆக உள்ளதால், இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு திரைப்பட ஊடக அமைப்புகளான திரைப்பட பிரிவு, திரைப்பட திருவிழா இயக்குனரகம், தேசிய திரைப்பட ஆவண காப்பகம், குழந்தைகள் திரைப்பட சம்மேளனம் ஆகிய 4 அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் (என்.எப்.டி.சி.) இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், திரைப்படங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வழி பிறக்கும். சம்பந்தப்பட்ட அமைப்புகளின் எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையிலும், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலும் திருத்தி அமைக்கப்பட்ட விமான சேவை ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

No comments:

Post a Comment