தமிழகம்: அரசு பள்ளிகளில் 10,000 ஆசிரியர்கள் புதிதாக பணியமர்த்தப் படுவார்கள்

புதிய சேர்க்கை நடந்துள்ள பள்ளிகளிலிருந்து சரியான தகவல்கள் வந்தவுடன், ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்

  • தமிழகத்தில் விரைவில் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப் படுவார்கள்.
  • இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
  • பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கப்படும்.

இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய சேர்க்கை கணிசமாக அதிகரித்து வருவதால், பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தமிழக அரசு விரைவில் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தும் என கூறப்பட்டுள்ளது.

இதற்காக, புதிய ஆசிரியர்களை நியமிக்க புதிய சேர்க்கைகளின் சரியான பட்டியலைத் தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் சுமார் 45,800 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 66 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். 3.02 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.


பள்ளி கல்வித் துறை (School Education Department) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்றார். "தொற்றுநோயால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக பலருக்கு கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், கல்வித் தரமும் அதிகரித்து வருவதாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு நடத்தும் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கியுள்ளனர்” என்று அந்த அதிகாரி கூறினார்.

மாணவர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதால், அரசு பள்ளிகள் (Government Schools) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதத்தில் சமநிலையற்ற தன்மை உண்டாகும். இப்போது இந்த விகிதம் தொடக்கப் பள்ளிகளில் 21.80 ஆகவும், மேல்தொடக்கப் பள்ளிகளில் 24.45 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 20.10 மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 24.50 ஆகவும் ஆக உள்ளது.

"புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாகிவிட்டதால், மாணவர்-ஆசிரியர் விகிதம் மாறும். அதன்படி, விகிதத்தை பராமரிக்க புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இது தேசிய சராசரியை விட சிறந்தத விகிதமாக இருக்கும்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment