பிப்ரவரி மாதம் வரை 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

பிப்ரவரி மாதம் வரை 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது நடந்த பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், சில மாநிலங்களில் அக்டோபர் முதல் பள்ளிகள் பகுதியாக திறக்கப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, 2020-21-ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், நேற்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற பிப்ரவரி மாதம் வரை நடத்தப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்பின்னர் உள்ள நிலைமை குறித்து ஆலோசனைகளுக்கு பின்னரே தேர்வு அட்டவணைகள் தயாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 10-ந்தேதி மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, பொதுத்தேர்வுகள் தொடர் பான மாணவர்களின் கேள்விகளுக்கு மந்திரி ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment