எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தார். கலந்தாய்வு நாளை (18-ந் தேதி) தொடங்குகிறது.

மருத்துவ படிப்புக்கான இடங்கள்

தமிழகத்தில் மொத்தம் 26 அரசு மருத்துவ கல்லூரிகளும், 2 பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இவை தவிர 15 தனியார் மருத்துவ கல்லூரிகளும், 18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ். இடங்களும், 194 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 2,100 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

இதில், அரசு கல்லூரிகளை பொறுத்தமட்டில் 3,032 எம்.பி.பி.எஸ். இடங்களும், 165 பி.டி.எஸ். இடங்களும் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். தனியார் சுயநிதி கல்லூரிகளை பொறுத்தமட்டில் 1,147 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,065 பி.டி.எஸ். இடங்களும் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.

தரவரிசை பட்டியல்

இந்த இடங்கள் அனைத்தும் ‘நீட்’ தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் தேர்வுக்குழு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான தரவரிசை பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

அரசு கல்லூரி ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான இடங்கள் என 3 தரவரிசை பட்டியல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு தரவரிசை பட்டியலிலும் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களை அமைச்சர் அறிவித்தார்.

முதல் 10 இடம்

அரசு கல்லூரி ஒதுக்கீட்டு இடங்களில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் அவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் (அடைப்புக்குறிக்குள்) விவரம் வருமாறு:-

1. ஆர்.ஸ்ரீஜன் (710), தி இந்தியன் பப்ளிக் பள்ளி, ஈரோடு. 2. மோகனபிரபா ரவிச்சந்திரன் (705), ஆல்பின் பப்ளிக் பள்ளி, 3. ஜி.சுவேதா (701), வேலம்மாள் வித்யாலயா, மேல் அயனம்பாக்கம், 4. பி.யாழினி (695), ஸ்ரீ சவுடாம்பிகா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 5. ஏ.அரவிந்த் (691), கிரீன்பார்க் இன்டர்நேஷனல் பள்ளி, 6.என்.நமிசரன் (690), வேலம்மாள் வித்யாலயா, 7. எம்.விக்னேஷ் (688), வேலம்மாள் வித்யாலயா, 8. கே.அனுவர்ஷினி (685), ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9. டி.ஆதித்தன் (683), வேலம்மாள் வித்யாலயா, 10. ஜெ.காவ்யா வர்ஷினி (682), பாவை வித்யாஷ்ரம்.

நாளை கலந்தாய்வு

இதே போன்று தனியார் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஷமீல் கல்லாடி (700), அம்மு மரியம் அனில் (695), ஜெய் முரேகர் (691) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

அரசு கல்லூரி ஒதுக்கீட்டு இடங்களில் முதலிடம் பிடித்த மாணவர் ஸ்ரீஜன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.பி.சி.நகரைச் சேர்ந்தவர் ஆவார். நாளை (18-ந் தேதி) முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

24 ஆயிரத்து 712 விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்பில் அரசு கல்லூரி ஒதுக்கீட்டு இடங்களில் சேர மொத்தம் 24 ஆயிரத்து 712 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 23 ஆயிரத்து 707 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில், மாநில அரசு கல்வி திட்டத்தின் மூலம் படித்து விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 15,885 ஆகும். மத்திய அரசு கல்வி திட்டத்தின் மூலம் படித்த மாணவர்கள் 7,366 பேரும், ஐ.எஸ்.சி.இ. எனப்படும் கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் 285 பேரும், இதர பாடத்திட்டத்தில் 171 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

தினமும் 500 பேர் பங்கேற்பு

தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர மொத்தம் 14,511 பேர் விண்ணப்பித்தனர். இதில், 14,276 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 18-ந் தேதி (நாளை) கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தினமும் 500 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி இந்த கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வின்போது யாரும் காத்திருக்க தேவையில்லை. குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒருவர் மட்டும் அனுமதி

கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவருடன் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் யாரேனும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலந்தாய்வின்போது காலி இடங்கள் குறித்த அறிவிப்பு அகன்ற திரையில் ஒளிபரப்பப்படும். மிகவும் வெளிப்படையான முறையில் இந்தியாவிலேயே முன்னுதாரணமாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

சான்றிதழ்களை சரிபார்க்கவும், ஆலோசனை தேவைப்படுவோருக்கு ஆலோசனைகளை வழங்கவும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோருக்கு தனியாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எந்த வித தவறும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலந்தாய்வு குறித்து குறுஞ்செய்தி மூலமும், ஊடகம் மற்றும் இணையதளம் மூலமும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்படும்.

புதிய மருத்துவ கல்லூரிகள்

11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த கல்லூரிகள் செயல்பட தொடங்கும். அப்போது, கூடுதலாக 1,650 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment