அரியர் தேர்வுகளை ரத்துசெய்ய முடியாது ஐகோர்ட்டில், பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டம்

💢அரியர் தேர்வுகளை ரத்துசெய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தேர்வுகள் ரத்து

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற செமஸ்டர் தேர்வுகளை எல்லாம் தமிழக அரசு ரத்து செய்து விட்டது.

செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேபோல, அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அரியர் தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதிகள் கருத்து

இந்த வழக்குகளுக்கு பதில் அளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது. பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில், இறுதி பருவத்தேர்வு நடத்த வேண்டியது அவசியம் எனவும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடைய செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் ஆர்.ஹேமலதா ஆகியோர், “பல்கலைக்கழக மானியக்குழுவின் பதில் மனுவில் தமிழக அரசு, அரியர் தேர்வை ரத்து செய்தது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட தொடங்கின. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார்.

ரத்து செய்ய முடியாது

இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு, விசாரணைக்கு வந்தபோது பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த மனுவில், அரியர் தேர்வை ரத்துசெய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரதான வழக்கு விசாரணை நாளை மறுதினம் வர உள்ளதால், அந்த வழக்கோடு இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment