அரசியல், சமுதாய, மதம் சார்ந்த கூட்டங்களுக்கான அனுமதி ரத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், வரும் 16-ந்தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கு, பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 9-ந்தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், வரும் 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா?, வேண்டாமா? என்று கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்த நிலையில், வரும் 16-ந்தேதி பள்ளிகளை மட்டுமல்லாது கல்லூரிகளையும் திறக்கும் முடிவை அரசு கைவிட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அ.தி.மு.க. அரசு, இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர். அவ்வாறு கூடும்போது, முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது, ஊடகங்கள் வாயிலாகவும், களஆய்வுகள் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு தெரியவருகிறது.

வெளிநாடுகளில் கொரொனா நோய் தொற்றானது இரண்டாம் அலையாக மீண்டும் பரவும் நிலையை நாம் காண முடிகின்றது. இச்சூழ்நிலையில் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16-11-2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது ரத்து செய்யப்படுகிறது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் என வல்லுனர்களும், பெற்றோர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும், 16-11-2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்ததால், கடந்த 9-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்-ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது. சில பள்ளிகளில் பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்க வேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த இருவேறு கருத்துகளையும் கல்வித்துறை ஆராய்ந்து, பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16-ந்தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.

அதேபோல், கல்லூரிகளை 16-11-2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படியும், 5-11-2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை 2-12-2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது.

மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 2-12-2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடர்ந்து நடைபெறும்.

கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் முக கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment