அரசிதழில் அறிவிப்பாணை வெளியீடு: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது இந்த ஆண்டே செயல்படுத்த அரசு முனைப்பு

தமிழகத்தில் மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமாகிவிட்டது.

உள்ஒதுக்கீடு மசோதா

நீட் தேர்வில் தகுதி பெறும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்குவதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

40 நாட்களுக்கு மேற்பட்ட நிலையில் அந்த மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால், அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. தமிழக அரசும் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் கேட்டு கவர்னரிடம் கோரிக்கை விடுத்தது.

கவர்னர் ஒப்புதல்

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 29-ந்தேதி இரவில் உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. மறுநாள் 30-ந்தேதியன்று பிற்பகலில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

சட்ட மசோதா தொடர்பாக கேட்கப்பட்டிருந்த சொலிசிட்டர் ஜெனரலின் சட்டரீதியான கருத்து, 29-ந்தேதி கிடைக்கப்பெற்றதால் 30-ந்தேதி ஒப்புதல் வழங்கியதாக கவர்னர் கூறியிருந்தார்.

சட்டமானது

இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பலர், மருத்துவக்கல்வி வாய்ப்பை பெறுவதற்கு ஏற்பட்டிருந்த தடை நீங்கியது. இதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறினார்.

இந்த நிலையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணையை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ கல்வியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது சட்டமாகிவிட்டது.

எனவே, இந்த ஆண்டிலேயே மருத்துவ கல்வி சேர்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக் கீட்டை அமல்படுத்தி, சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட அரசு மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.

No comments:

Post a Comment