ஆந்திராவில் அதிர்ச்சி : பள்ளி திறப்புக்கு பின்பு 262 மாணவர்களுக்கு கொரோனா 160 ஆசிரியர்களும் பாதிப்பு

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு 262 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 160 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பதால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநில பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப மாநில அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. அதன்படி ஆந்திராவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. பள்ளிகளும் நவம்பர் முதல் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி 9, 10-ம் வகுப்புகளுக்கு நவம்பர் 2-ந்தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு அரை நாட்கள் மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகள் நடக்கிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த 2 தினங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆந்திர பள்ளிக் கல்வி ஆணையர் வி.சின்னா வீரபத்ருடு கூறியதாவது:-

262 மாணவர்களுக்கு கொரோனா

நேற்றைய நிலவரப்படி 4 லட்சம் மாணவர்கள் பள்ளிகளுக்கு பயில வருகை தந்துள்ளனர். இவர்களில் 262 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. இது மாணவர் எண்ணிக்கையில் 0.1 சதவீதம் கூட இல்லை. அவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஒவ்வொரு வகுப்பறையிலும் 15 அல்லது 16 மாணவர்கள் மட்டுமே இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் சொற்பமாகும். இது ஆபத்தானதல்ல.

160 ஆசிரியர்களுக்கு பாதிப்பு

மாநிலத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 9.75 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 3.93 லட்சம் பேர் மட்டுமே தற்போது பள்ளிக்கு வருகை தருகிறார்கள். 1.11 லட்சம் ஆசிரியர்களில் 99 ஆயிரம் பேர் கல்வி நிறுவனங்களுக்கு வருகை புரிந்துள்ளனர். ஆசிரியர்களில் 160 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரின் வாழ்க்கையும் எங்களுக்கு முக்கியம். மக்களிடம் கொரோனா பற்றிய பயம் இன்னும் விலகாததால்தான் மாணவர்கள் வருகை 40 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியாத ஏழை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக மாணவிகளுக்கு இது மிகவும் சிக்கலானது. பதின்பருவத்தில் பள்ளிகளுக்கு செல்வது நிறுத்தப்படும்போது அவர்கள் வேலைக்கு அனுப்பப்படவோ, திருமண ஏற்பாடு நடக்கவோ வாய்ப்புள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற வகுப்புகள் நிறுத்தப்படுமா?

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 23-ந் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 14 முதல் பள்ளிகள் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது மாணவர்கள்- ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் இந்த பள்ளி திறப்பு பற்றிய முடிவில் மாற்றம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment