ரூ.200 கோடி ஊழல் புகார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது நீதிபதி விசாரணை தமிழக அரசு அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.கே.சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதா?, கர்நாடக மாநிலத்தில் தமிழரை இப்படி நியமிக்க முடியுமா? என்றெல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிரடி மாற்றங்கள்

அவர் பொறுப்பேற்றது முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அடிக்கடி செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் உலா வரத்தொடங்கின. சூரப்பா பொறுப்பேற்ற உடன் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு இயக்கப்பட்டு வந்த கார்களுக்கான பெட்ரோல் செலவை அண்ணா பல்கலைக்கழகம் செலுத்திவந்த நிலையில், அதை இனி செலுத்தமுடியாது என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக கல்வி கட்டணத்தை அவர் உயர்த்த முயற்சித்ததாக பேசப்பட்டது. அதற்கு பல எதிர்ப்புகள் வந்தன. அரசும் அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை. பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார்.

எதிர்ப்பு கிளம்பியது

அதன்பின்னர், மிக முக்கியமாக மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய ‘சீர்மிகு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவேண்டும் என கோரினார். அதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கடிதத்தையும் அனுப்பினார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அரசுக்கு தெரியாமல் கடிதம் எழுதலாமா? என அந்த கடிதத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

பல்வேறு புகார்கள்

இதற்கிடையில் கொரோனா காலத்தில் செமஸ்டர் தேர்வை மாணவர்கள் எழுத முடியாத காரணத்தினால் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்ததோடு, அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு சூரப்பா எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு தேர்ச்சி வழங்கலாமா? என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.) கடிதம் எழுதியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இவ்வளவு பரபரப்பு, எதிர்ப்புக்கு மத்தியில் தற்போது சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்திருப்பதாகவும், அதுபற்றி விசாரிக்க ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து இருப்பதாகவும் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா ஒரு அரசாணையை நேற்று வெளியிட்டார்.

ரூ.200 கோடி முறைகேடு

இதுகுறித்து அவர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவுக்கு எதிராக பல புகார்கள் பெறப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த பிப்ரவரி 21-ந்தேதியன்று திருச்சியைச் சேர்ந்த ஏ.சுரேஷ் அளித்த புகாரில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பரவலாக முறைகேடுகள் நடைபெறுகின்றன. அந்த பல்கலைக்கழகத்தின் துணை இயக்குனர் (சி.சி.சி.) சக்திநாதன், துணை வேந்தர் சூரப்பா மற்றும் பேராசிரியர்கள் சேர்ந்து அரசு பணம் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர்.

பணி நியமனத்துக்கு லஞ்சம்

அண்ணா பல்கலைக்கழக பிரதான வளாக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர் பணியில் நியமிப்பது தொடர்பாக ஒவ்வொருவரிடமும் ரூ.13 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சூரப்பாவும், சக்திநாதனும் ரூ.80 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

சி.வரதராஜன் அளித்த புகாரில், பல்கலைக்கழகத்தின் தேர்வு அலுவலகம் பல்வேறு ஊழலை செய்து வருகிறது. சட்டவிரோதமாக பணம் பெற்று, மோசடியாக தயாரிக்கப்பட்ட சான்றிதழ்களை பயன்படுத்தி அலுவலக உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை காப்பாற்றுங்கள் என்ற பெயரில் இ-மெயிலில் வந்த புகார் மனுவில், இயக்குனராக (சி.சி.சி.) செல்லதுரை நியமனம் செய்யப்பட்டதில் சிண்டிகேட் குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை

ஆர்.ஆதிகேசவன் அளித்த புகார் மனுவில், சூரப்பா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் அளித்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கான கல்லூரிகளுக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

கல்வி இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டது என்று ஏ.ஐ.சி.டி.இ.-க்கு தவறான தகவலை சூரப்பா அளித்தார்.

குற்ற முகாந்திரம்

இவை தவிர மற்ற புகார்களில், நிதி முறைகேடுகள், செமஸ்டர் தேர்வு மற்றும் மறு மதிப்பீட்டில் முறைகேடுகள் போன்றவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் முகாந்திரம் கடுமையாக இருப்பதால் எம்.கே.சூரப்பா மீது விசாரணை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அவர் மீதான மேற்கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின் 1978 11-ம் பிரிவின் 4ஏ மற்றும் 4பி உட்பிரிவின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனை அரசு நியமிக்கிறது. அவர் எதுகுறித்தெல்லாம் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கான உத்தரவுகளை அரசு வழங்கியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள்

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் அந்த பல்கலைக்கழகம் இயங்கியதா? சூரப்பா நியமனத்திற்கு பிறகு அந்த பல்கலைக்கழகத்தில் இயக்கம் எந்த நிலைப்பாட்டில் இருந்தது?

அவரது காலகட்டத்தில் நிர்வாகத்திலும், கல்வி பிரிவிலும் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக மற்றும் பிற பணி நியமனங்கள், நியமிக்கப்பட்டவர்களின் தகுதி மற்றும் அவர்களின் நியமனத்தின் பல்கலைக்கழக விதிகள் பின்பற்றப்பட்டதா? வேறு குற்ற முறைகேடுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய செயல்பாடுகள், இந்திய தண்டனை சட்ட பிரிவுகளுக்கு எதிராக செயல்பாடுகள், பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத் திட்டத்தில் (சி.ஏ.எஸ்.) கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை பற்றி விசாரிக்க வேண்டும்.

மேலும், கல்விக் கட்டணம், நன்கொடை உதவி, மானியங்கள் என்ற பெயரில் சூரப்பாவின் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தால் வசூலிக்கப்பட்ட தொகை, அவரது காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தால் வெளியே வழங்கப்பட்ட தொகை மற்றும் நிதி முறைகேடுகள், மோசடி, கையாடல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதிகார துஷ்பிரயோகம்

சூரப்பாவின் காலகட்டத்தில் தனி நபருடனோ, அமைப்புகளுடனோ மற்றும் கம்பெனி, அறக்கட்டளை, சங்கங்களுடன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்கள் பற்றியும், பல்கலைக்கழகத்தின் தொடர்புடைய யாரும் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

விசாரணையின் போது தெரிவிக்கப்படும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் தேவைப்பட்டால் விசாரிக்கலாம். கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தால், எதிர்காலத்தில் அவற்றை தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றி அரசுக்கு கருத்துகள் வழங்க வேண்டும்.

3 மாதங்களில்...

அரசு மேலும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை அளிக்க வேண்டும். விசாரணைக்கு தேவைப்பட்டால் அரசின் மற்ற விசாரணை முகமைகள், அதிகாரிகளின் சேவையையும் விசாரணை அதிகாரி பயன்படுத்திக்கொள்ளலாம். விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment