பள்ளிகளை திறப்பதா?, வேண்டாமா? 12,500 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்பு ஓரிரு நாட்களில் தமிழக அரசின் முடிவு அறிவிக்கப்படும் என தகவல்

பள்ளிகளை திறக்கலாமா? என்று மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றியபடி பெற்றோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதை படத்தில் காணலாம். இடம் - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அசோக்நகர்.
சென்னை, நவ.10-

9, 10, 11, 12-ம் வகுப்பு பள்ளிகளை திறக்கலாமா?, திறப்பதை ஒத்திவைக்கலாமா? என்பது பற்றி மாணவர்களின் பெற்றோரிடம் அரசு சார்பில் நேற்று கருத்துகள் கேட்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 12,500 பள்ளிகளில் நடந்த இந்த கூட்டங்களில் பெற்றோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு ஓரிரு நாளில் முடிவை தெரிவிக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளை திறக்கலாமா? பள்ளிகளை திறப்பதற்கு விடுக்கப்பட்ட அறிவிப்பை ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 9, 10, 11, 12-ம் வகுப்பு உள்ள அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

6,200 அரசு பள்ளிக்கூடங் கள், 6,300 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங் களில் இந்த கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.

கருத்துகளை கேட்கும்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அரசு வலியுறுத்தி இருந்தநிலையில், அதற்கேற்றாற்போல் பள்ளிகளும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தன. கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவது குறித்து ஏற்கனவே மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்று காலை மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொருவிதமாக கருத்துகள் கேட்கப்பட்டன. சில பள்ளிகள் கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை எழுதிவந்து ஒப்படைக்க அறிவுறுத்தி இருந்தன. சில பள்ளிகள் பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை அனுப்புவீர்களா?, அனுப்பமாட்டேன் என்றால் அதற்கான காரணத்தை கூறவும் என்றும், சில பள்ளிகள் பள்ளிகளை திறக்கலாமா?, திறப்பதை ஒத்திவைக்கலாமா?, அதற்கான காரணம் என்ன? என்றும் கேட்டு இருந்தனர்.

அதனை படித்து பெற்றோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர். தேர்தல் நேரத்தில் வாக்குச்சீட்டை பதிவு செய்து, வாக்குப்பதிவு பெட்டியில் போடுவது போல, ஒவ்வொரு பள்ளிகளிலும் கருத்துகளை பதிவு செய்து போடும் பெட்டிகள் பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் இதரபள்ளிகளில் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. சென்னையில் மட்டும் 659 பள்ளிகளில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ.அனிதா ஆகியோர் சென்னையில் சில பள்ளிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று பார்த்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஒவ்வொரு பள்ளிகளும் பட்டியலிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தனர். அதில் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்தவர்கள் எத்தனை பேர்?, சம்மதிக்காதவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. முதன்மை கல்வி அலுவலர்கள் அந்த பட்டியலை ஆராய்ந்து, அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அந்த விவரங்களை தெரிவித்தனர். அவர் அதனை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு சமர்ப்பிக்கிறார்.

பள்ளி கல்வித்துறை செயலாளர் தமிழக அரசிடம் தெரிவித்த பின், பெற்றோரின் கருத்துகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment