TNPSC GROUP 1 EXAM : கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதி நடக்கிறது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 3-ந்தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து 5 மாதங்களாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) எந்த பதவிகளுக்கும் தேர்வோ, கலந்தாய்வோ நடத்த முடியவில்லை. மேற்சொன்ன நாட்களில் நடத்தப்பட இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேற்று வெளியிடப்பட்டு இருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி 69 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 பதவிகளுக்கு முதல்நிலை தேர்வு 5.4.2020 அன்றும், தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு 25.4.2020, 26.4.2020 ஆகிய நாட்களிலும் நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு(2021) ஜனவரி மாதம் 3-ந்தேதியும், தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பதவிக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9, 10-ந்தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது.

இதேபோல், குரூப்-4 பதவிகளில் அடங்கிய தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வும் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அவற்றில் தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 2.11.2020 முதலும், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 28.11.2020 முதலும் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment