TNEA COUNSELLING 2020 : என்ஜினீயரிங் படிப்பு: சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது முதல் முறையாக ஆன்லைனில் நடக்கிறது

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் முறையாக இவர்களுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப்பிரிவு மாணவர்கள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி இருக்கிறது.

நேற்றும் (வியாழக்கிழமை), இன்றும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வுக்கான கட்டணத்தை செலுத்த அட்டவணை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) ஆகியோர் ரூ.5 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.1,000-ம் முன்பணமாக செலுத்த வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி வரை மாணவர்கள் தங்களுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்ய அட்டவணை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாணவர்கள் அதிகமான விருப்பங்களை தேர்வு செய்து கொள்ளவேண்டும். ஏனென்றால் குறைவான இடங்களே இருப்பதால், அதிக விருப்ப இடங்களை தேர்வு செய்வது நல்லது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

5-ந்தேதி (திங்கட்கிழமை) தற்காலிக ஒதுக்கீடும், அதனை உறுதி செய்வதற்கான பணிகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 6-ந்தேதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். இவை அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற இருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பது குறித்து விளக்க வீடியோ தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டு பிரிவில் 500 இடங்களுக்கு 1,409 பேரும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரிவில் 150 இடங்களுக்கு 862 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 149 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர். சிறப்பு பிரிவில் கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட்டாலும், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நேரடியாக அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக முதல் முறையாக இந்த ஆண்டு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்க இருக்கிறது. அவர்களுக்கான அட்டவணை விரைவில் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment