TN SCHOOLS REOPENING : தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் மற்றும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய அம்மா ஸ்கூட்டர் வழங்கும் முகாம் ஆகியவை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை அளித்து வருகிறார். அவரது ஆட்சியில் தமிழக பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் அணைகள் அனைத்தும் நீர் நிரம்பி உள்ளன. எனவே விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுபோல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை தரும் பொற்கால ஆட்சியாக இது உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும், இந்த பணியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் பாரத பிரதமர் நரேந்திரமோடி முதல் -அமைச்சர்களுக்கான காணொலி காட்சியில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை தமிழகத்தில் சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதால், இங்கு பொதுமக்கள் இயல்பு நிலையில் உள்ளனர். அச்சமின்றி இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு, மின்சாரம் சரியாக இருப்பதால் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொழில் அதிபர்கள் தொழில்தொடங்க தமிழகத்துக்கு வருகிறார்கள். இங்கிருந்து சென்ற வடமாநில தொழிலாளர்களும் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறப்பு என்பது சூழ்நிலையை பொறுத்து தமிழக முதல்-அமைச்சர் முடிவு செய்வார். சூழ்நிலைகள் மாறும்போதுதான் பள்ளிக்கூடம் திறப்பு பற்றி பரிசீலனை செய்யப்படும். தற்போது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லாத புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கூடுதலாக எவ்வளவு மாணவர்கள் சேர்ந்தாலும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் தேவையான புத்தகங்கள் வழங்கப்படும். மடிக்கணினி வழங்குவதற்கான டெண்டர் இன்னும் விடப்படவில்லை. கொரோனா காரணமாக அந்த பணிகள் தாமதமாகி உள்ளன. விரைவில் அதுபற்றி முதல்-அமைச்சர் மற்றும் அதுசார்ந்த அமைச்சர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நல்ல முறையில் நடந்து வருகின்றன. 52 மலைக்கிராமங்களில் மட்டும் இன்டர்நெட் இணைப்பு சரியாக கிடைப்பதில்லை என்ற நிலை உள்ளது. அதை சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

1 comment: