PLUS ONE, PLUS TWO MARK SHEET : பிளஸ்-2 பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகள் மூலம் 14-ந்தேதி முதல் வழங்கப்படும்

பிளஸ்-1, பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) வருகிற 14-ந்தேதி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் பெறலாம்.

600 மதிப்பெண் என்ற புதிய நடைமுறையில் தேர்வு எழுதியவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். 2 பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு இருதேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் பதிவுசெய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இந்த மாணவர்கள் இருதேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சிபெற்ற பின்னரே தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

அதேபோல், 1,200 மதிப்பெண் பழைய நடைமுறையில் நிரந்தர பதிவெண் கொண்டு தேர்வு எழுதிய பிளஸ்-2 தேர்வர்கள், முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பொதுத்தேர்வில் எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின் அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும். நிரந்தர பதிவெண் இல்லாமல் பிளஸ்-2 தேர்வு எழுதிய தேர்வர்கள் தற்போது மார்ச் 2020 பொதுத்தேர்வு எழுதி இருப்பின், அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment