என்ஜினீயரிங் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்திவைக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

என்ஜினீயரிங் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்திவைக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இணைப்பு நிறுத்தி வைப்பு

போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், 2 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. இதனால், 2020-21 கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவுகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2 கல்லூரிகளும் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, “அண்ணா பல்கலைக்கழக விதிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டது என கூறி, பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்தார். மேலும், 2 கல்லூரிகளுக்கும் புதிதாக நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டார்.

அமல்படுத்த கூடாது

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கல்லூரிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் சட்டப்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால், இந்த 2 கல்லூரிகளுக்கும் அனுப்பிய மனுக்கள் மீது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பல்கலைக்கழக இணைப்பு நிறுத்திவைப்பு உத்தரவை அமல்படுத்த கூடாது” என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment