இறுதி பருவ தேர்வுகளை நடத்துகிறபோது ‘அரியர்’ தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்தமுடியாது? சென்னை ஐகோர்ட்டு கேள்வி

இறுதி பருவதேர்வுகளை ஆன்லைனில் நடத்துகிறபோது, ‘அரியர்’ தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு

கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதி பருவதேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல ‘அரியர்’ தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடுத்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், ‘அரியர்’ தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது.

அதிகாரம் இல்லை

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை அரசு எடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்குகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே பல்கலைக்கழக மானியக்குழு சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. திறமையான புதுமையான முறையில் தேர்வை நடத்தலாம், தேர்வின் தரத்தை சமரசம் செய்யாமல், நேரத்தை 3 மணிநேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைக்கலாம்.

அனைத்து மாணவர்களுக்கும் சமூக இடைவெளியோடு, ‘ஷிப்ட்’ முறையில் தேர்வுகளை நடத்தலாம். கல்வி நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஆப்-லைன், ஆன்-லைன் மூலம் நடத்தலாம்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி இறுதிதேர்வை நடத்தாமல் கடந்த பருவத்தேர்வு மதிப்பெண்ணை வைத்து மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தேர்வை நடத்துவதற்கான கால அவகாசத்தை தள்ளிவைக்க மாநில அரசுகள் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் கோரிக்கை வைத்து அவகாசம் பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கேலிக்கூத்தாக்க வேண்டாம்

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், ”அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிலைப்பாடு என்ன? அரியர் தேர்வு குறித்து பதில் மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை.

நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு வக்கீல், “அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக தெளிவான கூடுதல் பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அரியர் தேர்வுகள் ரத்து செய்வதில் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உடன்பாடு இல்லை” என்று கூறினார்.

நீதிபதிகள் கேள்வி

இதையடுத்து நீதிபதிகள், “இறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும், தமிழக அரசுக்கும் அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற நவம்பர் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment