தனியார் கல்லூரிகள் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை

மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் முறைகேடு செய்துள்ளதாகவும், அதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தடை விதிப்பு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்துக்குள், மருத்துவ மேற்படிப்புக்கான இறுதிகட்ட (3-வது) கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில், இறுதிகட்ட கவுன்சிலிங்கை நடத்தாமல், தனியார் மருத்துவ கல்லூரிகளே இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் என்று சென்னை ஐகோர்ட்டில் டாக்டர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தனியார் கல்லூரிகள் இறுதி செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.

பதில் வேண்டும்

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இறுதிகட்ட கவுன்சிலிங் நடத்த அனுமதி கோரிய தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது என்று அரசு தரப்பு வக்கீல் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற தடையை நீக்கினார். மேலும், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கீதாஞ்சலி கூறும் குற்றச்சாட்டுக்கு, தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.தங்கசிவம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களுக்கு அநீதி

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் காலியாக இருந்த 74 மருத்துவ மேற்படிப்பு இடங்களை தனியார் கல்லூரிகளுக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காலியிடங்களை நிரப்புவதற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்கும் நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன. தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால், அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி இழைப்பதற்கு சமம் ஆகும்.

பெரிய ஆபத்து

தகுதி இல்லாமல் பணம் கொடுத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களை விலைக்கு வாங்கும் மாணவர்களால் இந்த சமுதாயத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு இடம் பெற பணம், மேலிட தொடர்பு, அதிகாரம் ஆகியன முக்கியக் காரணியாக இருக்கக் கூடாது. தகுதி மட்டுமே காரணியாக இருக்க வேண்டும்.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையேயான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு? என்ற விவரங்கள் உரிய விசாரணைக்குப் பிறகே வெளியே வரும்.

போலீஸ் விசாரணை

எனவே, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.இந்த விசாரணை குறித்த அறிக்கையை ஜனவரி 30-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment