தமிழக அரசு அதிரடி நடவடிக்கை - மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

கவர்னர்

கவர்னரின் ஒப்புதலுக் காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. எனவே மூத்த அமைச்சர் கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் கவர்னருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

சிறப்புச் சட்டம்

இந்தநிலையில் திடீரென்று தமிழக அரசு, அரசாணை ஒன்றை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த மார்ச் 21-ந் தேதியன்று தமிழக சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள்ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விபரங்களையும் தொகுத்து, உரிய பரிந்துரையையும், அரசுக்கு வழங்க ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இந்தப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவில் சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர்களின் சமூக பொருளாதார நிலையை மதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

பரிந்துரை

2017-18-ம் ஆண்டில் இருந்து நீட் தேர்வு நடக்கிறது. அதிலிருந்தே எம்.பி.பி.எஸ். படிப்பில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது. இந்தநிலையை ஆராய்ந்து, அதற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கு ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அந்த ஆணையம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குள்ள பொருளாதாரம், பயிற்சி பெறும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங் கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

எனவே எம்.பி.பி.எஸ். கல்வியில் சேர்வதற்கு இரண்டு தரப்பு மாணவர்களுக்கு இடையே நிலவும் இடைவெளியை நிரப்புவது அவசியம். அதன்படி, நீட் தேர்வில் தகுதி பெறும், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மேல்நிலைக் கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கலாம். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையேயுள்ள சமமற்ற நிலை மாறும் என்று கூறப்பட்டு இருந்தது.

அரசின் முடிவு

இந்த பரிந்துரையை அரசு கவனமுடன் பரிசீலித்தது. இரண்டு தரப்பு மாணவர்களிடையே உண்மையான சமத்துவத்தை கொண்டு வருவதற் காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். உள்பட மற்ற மருத்துவக் கல்விகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசு முடிவு செய்தது.

இந்தநிலையில் கடந்த ஜூன் 8-ந் தேதியன்று முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில், நீதிபதி கலையரசன் ஆணையத்தின் பரிந்துரைகள் வைக்கப்பட்டன. கடந்த ஜூன் 15 மற்றும் ஜூலை 14-ந் தேதிகளிலும் அமைச்சரவை கூடி ஆய்வு செய்து, சில முடிவுகளை எடுத்தது.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படித்து, நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு 7.5 சதவீத உள் ஒதுக் கீட்டை வழங்கலாம்;

எந்தெந்த மருத்துவ கல்விக்கெல்லாம் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி) நீட் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதிலும் இந்த உள்ஒதுக்கீடு பொருந்தும்;

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு அளிக்கும் கல்வி இடங்கள் ஆகியவற்றிற்கும் இந்த உள் ஒதுக்கீடு பொருந்தும், என்ற முடிவுகள் எட்டப்பட்டன.

மசோதா நிறைவேற்றம்

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டின் அட்வகேட் ஜெனரலின் ஒப்புதலையும் அரசு பெற்றது. இதுதொடர்பாக அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்த உள்ஒதுக் கீட்டை வழங்கும் அரசின் முடிவு, அரசியல் சாசன சட்டத்தின் 14 மற்றும் 15-ம் ஷரத்துகளுக்கு முரணானது அல்ல என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் இந்த உள்ஒதுக்கீட்டை வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பப்பட்டது.

அரசியல் சாசனவிரிவாக்க அதிகாரம்

தற்போது இளநிலை கல்விக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. எனவே இதில் முடிவெடுப்பதற்கு மிகுந்த அவசர நிலை எழுந்துள்ளது.

இதில் முடிவெடுப்பதற்கு, அரசியல் சாசனத்தின் 162-ம் ஷரத்தின்படி, இணையான அதிகார விரிவாக்கத்தை பெற்று, நிர்வாக உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் இருப்பதால், கவர்னரின் முடிவு காலதாமதமாகும் நிலையில், தமிழக அரசே கொள்கை முடிவுகளை எடுத்து அதை அரசாணையாக வெளியிடுகிறது.

அரசாணையின்படி

அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை படித்து நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யூ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். ஆகிய கல்வியில் சேர்வதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உள்ஒதுக்கீட்டின்படி நடக்கும் மாணவர் சேர்க்கையில் 2020-21-ம் ஆண்டில் இருந்து 69 சதவீத இடஒதுக் கீடு பின்பற்றப்படும்.

அதுபோல, அரசு குறிப்பிட்டுள்ள பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறாத பள்ளிகளிலோ 8-ம் வகுப்புவரை கட்டாய கல்விச் சட்டத்தின்படி சேர்ந்து படித்து, அதன் பிறகு மீதமுள்ள உயர் கல்வியை அரசுப் பள்ளியில் முடித்துள்ள, மிகப் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் அரசுப் பள்ளி மாணவர்களாக கருதப்படுவார்கள்.

இந்த உள்ஒதுக்கீட்டை பெறுபவர்களைத் தவிர, மற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்வி இடங்களை பெறுவதற்கு போட்டியிட தகுதி உண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை அரசிதழில் வெளியிட்டால் அதன் பிறகு அது சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிடும். தற்போது கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிடப்பட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment