அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 1-ந் தேதி தொடங்குகிறது பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.

‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்து போராடி வரும் நிலையில், தேர்வை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு இ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அந்த மாணவ-மாணவிகள் கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில் கலந்து கொண்டு தேர்வை எழுதினார்கள். அவர்களில் 1,633 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1-ந் தேதி தொடங்கும்

கடந்த ஆண்டை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான இலவச ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனமே வழங்க இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதம் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட இருக்கிறது.

பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவ-மாணவிகளின் பெயர், முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களை பெற்று உடனடியாக பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதிகளவிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த இலவச ஆன்லைன் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment