EMPLOYMENT : சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிக்கு காலி இடங்கள் விண்ணப்பிக்க 1-ந்தேதி கடைசி நாள்

கடலூர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் , சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 1-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கான தகுதியாக, பொதுப்பிரிவு மற்றும் பட்டியல் இனத்தவர்கள் கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பட்டியலின பழங்குடியினர் (எஸ்.டி.) 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சமையலர் பணியிடத்திற்கான தகுதியாக, பொது பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர், கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பட்டியலின பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியாக, பொதுப்பிரிவு மற்றும் பட்டியல் இனத்தவர் கல்வித்தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள், 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பட்டியலின பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர், விண்ணப்பிக்கும் காலி பணியிடத்துக்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.7.2020 அன்றைய தேதியின் படி விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான உச்சவரம்பு 43 வயது வரையிலும் இருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் பள்ளி சத்துணவு மையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியாக இருந்தால், சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், நகராட்சி பகுதியாக இருந்தால் நகராட்சி ஆணையரிடமும் வருகிற 1.10.2020 மாலை 5 மணி வரை தகுதியுடைய நபர்கள் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

1.10.2020 மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். கல்வி, சாதி மற்றும் தூரச்சுற்றளவு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத, தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள், விவரம் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, வயது, சாதி, குடும்ப அட்டை, இருப்பிடம், மாற்றுத்திறனாளி, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் என்றால், அதற்கான உரிய சான்றிதழ்களின் சான்றொப்பம் செய்யப்பட்ட நகலை இணைக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment