இறுதியாண்டு தேர்வுகள் நடத்துவதில் பல்கலைக்கழகங்கள் தீவிரம் மானியக்குழு தகவல்

கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் பல்கலைக்கழகங்கள் இந்த மாதம் நடத்த வேண்டிய இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி இருந்தது. எனினும் கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதால் இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் கேட்டுக்கொண்டன. 

இந்த நிலையில் தேர்வுகள் நடத்துவது தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கு, மானியக்குழு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி 640 பல்கலைக்கழகங்கள் பதிலளித்து உள்ளன. இதன்படி, அந்த பல்கலைக்கழங்கள் தேர்வு நடத்துவதில் தீவிரம் காட்டி வருவதாக மானியக்குழு தெரிவித்து உள்ளது. 

அதன்படி 182 பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை (ஆன்லைன் அல்லது நேரடியாக) நடத்தி முடித்து உள்ளன. 234 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நடத்த திட்டமிட்டு வருகின்றன. மேலும் 38 பல்கலைக்கழங்கள் சம்பந்தப்பட்ட கவுன்சிலின் வழிகாட்டுதல்படி நடத்த முடிவு செய்துள்ளன. வெறும் 177 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை முடிவு செய்யவில்லை எனவும், இதில் 27 பல்கலைக்கழங்கள் கடந்த 2019-20-ம் ஆண்டு தொடங்கப்பட்டவை எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment