மழலையர்களுக்கு வகுப்புகள் கிடையாது ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

மழலையர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்றும், 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் வருகிற ஆகஸ்டு 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துவிட்டது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வழிக்கல்வியை பள்ளிகள் முனைப்போடு செயல்படுத்தி வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் ஆன்லைன் வழிக்கல்வியில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆன்லைன் வழிக்கற்றல் குறித்து மாநில அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள், மத்திய அரசின் நெறிமுறைகளின்படியே உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் ஆன்லைன், பகுதிநேர ஆன்லைன், ஆன்லைன் இல்லாத முறை என 3 பிரிவுகள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கலாம். பள்ளிக்கல்வித் துறை சார்பில் 1 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியில் பாடங்கள் பதிவிறக்கம் செய்துகொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர, ஆகஸ்டு 3-ந்தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகள் மூலமும் வீடியோ பாடங்கள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு அதிகபட்சம் ஒளிபரப்பு நேரம் ஒரு மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தேவையான மடிக்கணினி, கம்ப்யூட்டர், இணையதள வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை தலைமை ஆசிரியர்கள் செய்துகொடுக்கவேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோருடன் அவ்வப்போது அல்லது வாரத்துக்கு ஒருமுறையாவது பேசி கருத்துகளை பெறவேண்டும். மழலையர்(எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மற்றும் 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுடன் மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்களை திட்டமிடவேண்டும்.

பெரிய மாணவர்கள் ஒரு வகுப்பு முடித்து அடுத்த வகுப்பில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அவர்களை புதுப்பித்துக்கொள்ளவும், உற்சாகப்படுத்திக்கொள்ளவும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை கொடுக்கவேண்டும்.

ஆன்லைன் கற்றல் செயல்பாட்டில் அனைத்து குழந்தைகளும் பங்கேற்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் ஊக்கப்படுத்தவேண்டும். பாடம் நடத்திமுடித்த பிறகு, பாடம் தொடர்பான பணிகளை செய்ய சொல்லி, அதனை ஆசிரியர்கள் பார்த்து பாராட்டவேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற கல்வியை அளிப்பதில் ஆசிரியர்கள் தங்களை நன்றாக தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தஒருமாணவரும் விட்டுப்போகாத வகையில் ஆன்லைன்வகுப்பில் பங்குபெறும்வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்லைன்வகுப்புகளில் பங்கேற்க வசதியில்லாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளே மாற்று கல்வி புகுத்தல் முறையை வகுத்துக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை பள்ளிகள் திறந்த பிறகு வழங்கவேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்குபெற பெற்றோர் உதவவேண்டும். மின்னணு முறைப்படி வருகைப்பதிவு செய்யவேண்டும். ஆனால் நிதி தொடர்பாகவோ அல்லது தண்டனை வழங்குவதற்கோ அல்லது மாணவர்களின் செயல்பாட்டை மதிப்பிடும் முறையிலோ இந்த வருகைப்பதிவை பயன்படுத்தக்கூடாது.

ஒவ்வொரு ஆன்லைன் வகுப்புகளும் 30 முதல் 45 நிமிடம் கொண்டவையாக இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர், பாதுகாவலரின் ஆலோசனைப்படி நேரத்தை குறைக்கலாம். ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு 6 வகுப்புகள் எடுக்க வேண்டும். வாரத்துக்கு அதிகபட்சமாக 28 வகுப்புகள் எடுக்கவேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளான இடைவெளிக்குள் நடத்தப்படவேண்டும். ஆன்லைன் வகுப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் பணிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் முடித்துவிடவேண்டும்.

மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை கற்பிப்பதற்கான ஆன்லைன் வகுப்புகள் எதுவும் திட்டமிடக்கூடாது. ஆனால் பெற்றோருடன் சேர்ந்து தொடர்புகொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு மிகாமல் ஆன்லைன் அமர்வு திட்டமிடப்படலாம். 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 அமர்வுகளும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 அமர்வுகளும் நடத்தலாம். ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment