1 முதல் 5-ம் வகுப்பு வரை கருணாநிதி கொண்டு வந்த தாய்மொழி கல்வி திட்டம்

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கும் என்ற திட்டம் தமிழகத்தில் அமலில் இருந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கையில் 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும் என்றும், 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கும் என்ற திட்டம் தமிழகத்தில் அமலில் இருந்தது.

தமிழ்நாட்டில் 1920-ம் ஆண்டில் இருந்து தாய்மொழி வழிக்கல்வி என்பது தொடக்கப்பள்ளிகளில் இருந்துள்ளது. தாய்மொழி வழிக்கல்வி தான் அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை கொடுக்கும். அரசு பள்ளிகளில் தாய்மொழியில் கற்பதற்கு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு வகையான ஊக்கங்கள் அளிக்கப்பட்டது.

குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ்மட்டுமே அவருடைய ஆட்சிக்காலத்தில் பயிற்றுமொழியாக இருந்தது.

அதன்பின்னர், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழி ஒருபிரிவாக 1-ம் வகுப்பு முதல் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு பிரிவாக தொடங்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் பயிற்றுமொழியாக கொண்ட பிரிவுகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:-

இப்போது வெளியிடப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கையில் 5-ம் வகுப்புவரை தாய்மொழி அல்லது மாநில மொழி பயிற்றுமொழியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது மாநில மொழி பயிற்றுமொழியாக நீட்டிப்பது விரும்பத்தக்கது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இந்த கல்வி கொள்கையில் இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கும் என்ற வகையில் திட்டவட்ட அறிவிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment