கொரோனாவும், தாய்-சேய் நலமும்

டாக்டர் த.ஸ்ரீகலா பிரசாத்,

துறை தலைவர்,

மகளிர் சிறப்பு சிறுநீரகவியல் துறை,

அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, சென்னை.

ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் மற்றும் மகப்பேறு என்பது அவளுடைய வாழ்நாளில் மிகவும் இனிமையான வசந்த காலமாகும். ஆனால் நடக்கும் 2020-ம் ஆண்டில் உலகமே கொரோனா என்ற எதிரியுடன் போராடிக்கொண்டு இருக்கையில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சற்று எச்சரிக்கையுடனே நடந்து கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று சக மனிதர்களுக்கு வருவது போலவே இவர்களையும் தாக்கலாம். ஆனால் இந்த நோய் இவர்களை அதிகமாக தாக்கும் அல்லது தீவிரமாக தாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. எனவே அனைவரையும் போல சமூக விலகல் மற்றும் தனித்து இருப்பதை இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சுவாச கோளாறுகள் இருந்தால் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் கர்ப்ப காலத்தின் எந்த மாதத்தில் இருந்தாலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும். வேலை பார்ப்பவர் என்றால் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பத்தார் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். வீட்டினுள்ளும் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள், மேஜையின் மேற்பரப்பு மற்றும் கதவின் கைப்பிடியினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். அருகில் கைக்குட்டை இல்லையென்றால் முழங்கை கொண்டு முகத்தை மூட வேண்டும்.

மிக அவசியமான பயணம் என்றால் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். பொது வாகனத்தில் செல்லவேண்டி வந்தால் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி செல்ல வேண்டும்.

உங்களுடைய கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் செய்து கொள்ள மருத்துவரை 6, 12, 19 வாரங்களில் நேரில் அணுக வேண்டும். இதனை தவிர்த்து மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்றால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லவும். உங்களுடைய சந்தேகங்களை உங்கள் மகப்பேறு மருத்துவர் அல்லது கிராம சுகாதார செவிலியரிடம் அலைபேசியில் பேசி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அவசியமாக நேரில் பரிசோதனைக்கு வர வேண்டிய தேதிகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமந்தம்(வளைகாப்பு), வீட்டிலேயே நெருங்கிய சில உறவினர்கள் முன்னிலையில் சுகாதாரமாக நடைபெறுவதே தாய்க்கும், சிசுவிற்கும் நல்லது.

பிரசவ தேதி நெருங்கும் 1 வாரம் முன்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரசவ வலி ஏற்பட்டால் உங்கள் வருகையை மருத்துவமனைக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டு செல்லுங்கள். இது அவர்களை தயார் நிலையில் இருக்க உதவும்.

இவை அனைத்துமே முன்னெச்சரிக்கைகள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கர்ப்ப காலத்தில் ஏற்பட்டால் பயமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அனைத்து வசதிகளும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.

பிரசவ நேரத்தில் உங்களுடன் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்க படுவார். ஒரு பிரசவம் சுகப்பிரசவமா அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை கர்ப்பிணியின் பிரசவ நிலை மட்டும் சிக்கல்கள் அறிந்து மகப்பேறு மருத்துவர் முடிவு செய்வார். சாதாரணமாகவே அறுவை சிகிச்சை செய்வதற்கு முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து முறையே சாலச்சிறந்தது. கொரோனா தொற்று பரவுவதை குறைப்பதற்கும் இந்த முறையே சிறந்தது. எனவே முடிந்தவரை மருத்துவர் அதையே பின்பற்றுவார். கொரோனா தொப்புள் கொடி வழியாகவோ, பனிக்குட நீரிலோ பரவவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் கொரோனா நோய் உள்ள தாய், தாய்ப்பால் தரலாமா? என பலருக்கும் ஐயம் உண்டு.

இது தாய்ப்பால் மூலமாக பரவ வாய்ப்புகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்கள் பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே தாய்ப்பால் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. ஆனால் வைரஸ் பாதித்த தாயின் மிக அருகில் இருக்கும் போது காற்றின் மூலமாக தொற்று ஏற்படலாம். கொரோனா பாதித்த தாய் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாலுட்டலாம்.

தாய்-சேய் விலகல் கடைப்பிடிப்பது அவசியம். குழந்தை தனி அறையில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரு நபரின் கவனிப்பில் இருக்க வேண்டும். இவர் முக கவசம் அணிந்து, கை சுகாதாரம் பேண வேண்டும். தனித்து இருக்க முடியாவிடில் ஒரே அறையில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.

குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். என்-95 முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் அருகில் இருமவோ, தும்மவோ கூடாது. தாய் மற்றும் சேய் உபயோகிக்கும் எந்த மேற்பரப்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பம்ப் மூலமாக தாய்ப்பால் வெளியிட்டு குழந்தைக்கு புட்டியில் தரலாம். பம்புகளை மிகவும் சுத்தமாக கையாள வேண்டும். சேயினை பிரிந்த தாய்க்கு மனச்சோர்வு வராமல் அவரை உளவியல் ரீதியாக ஊக்குவிக்க வேண்டும். தாயின் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் வீரியம் எப்போதும் கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தையை பார்க்கவோ அல்லது வாழ்த்துகள் சொல்லவோ உறவினர்களை அனுமதிக்க வேண்டாம். இந்த சமயங்களில் தாய் சேய் நலனை மேலும் கவனமாக, சுகாதாரமாக பேணுவது குடும்பத்தினரின் கடமையாகும்.

கொரோனா பாதித்த கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களின் உணவு முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பொதுவாக இவர்களுக்கு புரதச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவினை அளிக்க வேண்டும். தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். நமது பாரம்பரியமான இஞ்சி, பூண்டு, மஞ்சள், துளசி, மிளகு, நெல்லிக்காய், பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் கீரைகள் ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் மூலம் கொரோனா பரவாது, எனவே அதனை உட்கொள்ளலாம்.

உலகமே கொரோனா நோய் குறித்து மிகுந்த பயம் கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மேலே கூறியதை கவனித்து செயல்படுங்கள். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வர். நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

No comments:

Post a Comment