நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர சிறப்பு உள் ஒதுக்கீடு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சிறப்பு சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை 2016-2017-ம் கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவின் தீவிர முயற்சியினால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து அந்த ஆண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. அரசும், பொது மக்களும், தமிழ்நாடும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றோம். 31.1.2017 அன்று, நீட் தேர்வினை எதிர்த்து ஒரு சட்டமுன்வடிவினை இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதே வேளையில், இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டு, மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடப்பட்டும் வருகிறது.

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றது. இது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருகிறது.

இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வு பெற்ற ஒரு ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில், ஒரு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தில், பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சட்டம் ஆகிய துறைகளின் அரசுச் செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறையினால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.

மேற்கூறிய பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து, இந்நிலையை சரி செய்ய, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment