இந்திய அளவில் தர வரிசை பட்டியல்: தனியார் பல்கலைக்கழகங்களில் வி.ஐ.டி. முதலிடம்

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி பாடத்திட்டம், ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுதல், தொழிற்சாலையுடன் இணைந்த கல்விமுறை ஆகியவற்றை ஆண்டுதோறும் இங்கிலாந்து நாட்டின் கியூ.எஸ். தரவரிசை அமைப்பு ஆய்வுசெய்து தரவரிசை சான்று வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான உலக அளவிலான பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் வி.ஐ.டி. 450 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் தனியார் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் வி.ஐ.டி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியலில் வி.ஐ.டி. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 150 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. அதேபோல் கம்ப்யூட்டர் சயின்ஸ்-இன்பார்மேஷன் சிஸ்டம் மற்றும் வேதியியல் பாடங்களில் 50 இடங்கள் முன்னேறி உள்ளது.

கெமிக்கல் என்ஜினீயரிங் 350-வது இடங்களுக்குள்ளும், மெக்கானிக்கல் மற்றும் உற்பத்தி பாடங்களில் 450-வது இடங்களுக்குள் தரவரிசை பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்திய அரசின் சார்பில், நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்துவதில் வி.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் வி.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment