புதிய கட்சி தொடங்குவது குறித்து  ரஜினிகாந்த் இன்று முக்கிய அறிவிப்பு?

புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட உள்ளார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலா ளர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில், "கட்சி வேறு; ஆட்சி வேறு. 48 வயதுக்கு உட்பட்டவருக்கே கட்சியில் முக்கிய பொறுப்பு. தனக்கு முதல்வர் நாற்காலியில் அமர ஆசை இல்லை!’’ என்று தெரிவித்தார். மேலும், கூட்டத் துக்குப் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய அவர், "சில விஷயங்கள் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது" எனக் குறிப்பிட்டார். கூட்ட நிகழ்வுகளால் குழப்பத்தில் இருந்த மாவட்டச் செயலாளர் களுக்கு, ரஜினி இவ்வாறு கூறியது மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

ரஜினி தயங்கியது ஏன்?

ரஜினி இவ்வாறு தயங்கியதற்கான காரணம் பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறிய தாவது:

முன்னாள் முதல்வர்கள் கருணா நிதி, ஜெயலலிதா இருவரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசிய லில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி கருதினார். அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். எனினும் இருபெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் உறுதியான தலைமையின் கீழ் கட்டுக்கோப்போடு செயல்படுவதும், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் உட்பட தேர்தல்களில் அக்கட்சி களுக்கு கிடைத்து வரும் வெற்றிகளும் ரஜினிகாந்தின் நம்பிக்கையை சற்று குலைத்தது.

மேலும், ரஜினிகாந்துக்கு பக்கபலமாக பாஜக உள்ள போதிலும், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்வினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், குடியுரி மைச் சட்டம் போன்ற விவகாரங் களில் ரஜினிகாந்த் எடுத்த நிலைப்பாடு தமிழ்நாட்டில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது.

மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு தனக்கு இருந்தாலும் கூட, அதை மட்டுமே கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது என ரஜினி நினைக்கிறார். இதுபோன்ற பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்ததாலேயே, புதிய கட்சி அறிவிப்பு பற்றி அவரிடம் பெரும் தயக்கம் நீடித்து வருகிறது. இதன் வெளிப்பாடுதான் கடந்த வாரம் நடைபெற்ற மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின்போது அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

உடல்நலம் ஒரு காரணமா?

மேலும், கட்சி தொடங்கி விட்டால் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எழுபது வயதைக் கடந்த நிலையில் இத்தகைய தீவிர சுற்றுப் பயணம், அலைச்சல், மன உளைச்சல், அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ள இயலுமா என்றும் அவர் தயங்குகிறார்.

ரஜினிகாந்த் எடுக்கும் முடிவானது வெறும் அரசியல் ரீதியானது மட்டுமல்ல; 40 ஆண்டு காலமாக அவர் கட்டிக்காத்து வரும் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற மிகப்பெரும் அந்தஸ்து தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவரது முடிவு இருக்க வேண்டும் என்று அவரைச் சந்திப்போர் கூறி வருகின்றனர்.

இதனால் ரஜினியிடம் இருந்த தயக்கம் நீங்கி, அரசியல் களத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள அவர் தயாராகிவிட்டார். அதனாலேயே மீண்டும் அவர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார். மேலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தையும் அவர் இன்று நடத்தவுள்ளார். இன்றைய கூட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பை நிச்சயம் அவர் வெளியிடுவார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.40 ஆண்டு காலமாக அவர் கட்டிக்காத்து வரும் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற மிகப்பெரும் அந்தஸ்து தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவரது முடிவு இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment