மாணவர்களுக்கு விடுமுறை: பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் பணிகள் என்ன? கல்வித்துறை ஆணையர் விளக்கம்

மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிகள் குறித்து கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கல்வி துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திட்டமிட்டபடி நடைபெறும் பொதுத்தேர்வுகள் முடியும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள், உறைவிட பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.

பணிகள் என்ன?

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்க அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் உரிய கிருமிநாசினி மற்றும் சோப்பு கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் நடப்பு கல்வியாண்டுக்குரிய தேர்வு பணிகள் மற்றும் 2020-21-ம் ஆண்டுக்குரிய ஆண்டு திட்டம், கால அட்டவணை தயாரிப்பு, திக்‌ஷா அப்ளிகேஷன் மூலம் கியூ ஆர் கோடில் உள்ள பாட விவரங்களை சேகரித்தல், ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புக்குரிய மாதிரிகளை உருவாக்குதல், புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப்பணிகள் போன்ற பணிகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment